சமகால கிரிக்கெட்டில் தலைசிறந்த ஆல்ரவுண்டராக வலம் வருபம் பென்ஸ்டோக்ஸ் ஆவார். இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 மற்றும் ஒருநாள் போட்டித்தொடரில் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பெரியளவில் சோபிக்கவில்லை. மற்ற வீரர்களும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத காரணத்தால் டி20 தொடரையம், ஒருநாள் தொடரையும் இங்கிலாந்து இந்தியாவிடம் பறிகொடுத்தது.


இந்த சூழ்நிலையில், ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக பென்ஸ்டோக்ஸ் இன்று அதிரடியாக அறிவித்தார். அவரது அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கும், வீரர்களுக்குமே பெரியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவரது ஓய்வு அறிவிப்பு குறித்து இந்தியாவின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட்கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ நான் இதுவரை விளையாடியதிலே மிகவும் மரியாதைக்குரிய போட்டியாளர் நீங்கள்” என்று பென் ஸ்டோக்சை பாராட்டி பதிவிட்டுள்ளார்.




ஜோ ரூட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பென் ஸ்டோக்ஸ், எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிடய வென்று கொடுத்தார். ஆனாலும், அந்த போட்டியில் இரு இன்னிங்சிலும் அவரது பேட்டிங் மற்றும் பவுலிங் மெச்சும்படி அமையவில்லை. தொடர் போட்டிகள் அழுத்தம் உள்ளிட்ட சில காரணங்களாலும், டெஸ்ட் போட்டியில் அளிக்கப்பட்ட கேப்டன்சி பொறுப்பின்மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாலும் பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.


31 வயதே ஆன பென் ஸ்டோக்ஸ் இதுவரை 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3 சதங்களுடன் 2 ஆயிரத்து 919 ரன்களை விளாசியுள்ளார். அவற்றில் 21 அரைசதங்களும் அடங்கும். மேலும், 74 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2019ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை இறுதிப்போட்டியில் கடைசி வரை போராடி இங்கிலாந்து அணிக்கு பென்ஸ்டோக்ஸ் வாங்கித்தந்ததை எவராலும் மறக்க முடியாது.




டெஸ்ட் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் 83 போட்டிகளில் ஆடி 11 சதங்கள், 1 இரட்டை சதம் உள்பட 5 ஆயிரத்து 280 ரன்களையும், 182 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவின் இளம் வீரர் டி காக் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பென்ஸ்டோக்ஸ் தென்னாப்பிரிக்கா அணியுடன் வரும் செவ்வாய்கிழமை நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண