இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளும், விராட்கோலி கேப்டன்சியில் இருந்து விலகியதும் தற்போது கடும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதுதொடர்பாக, அக்தர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
“ விராட்கோலி கேப்டன்சியில் இருந்து விலகவில்லை. அவரை கட்டாயப்படுத்தி செய்ய வைத்துள்ளனர். இது அவருக்கு சரியான நேரம் இல்லை. ஆனால், அவர் யார் என்று நிரூபிக்க வேண்டும். அவர் என்ன இரும்பில் செய்யப்பட்டவரா? விராட்கோலி ஒரு சிறந்த மனிதர் மற்றும் ஒரு கிரிக்கெட் வீரர். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். உலகில் மற்றவர்களை காட்டிலும் அவர் அதிகமாகவே சாதித்துள்ளார். அவர் அங்கெல்லாம் சென்று தனது இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும்.
விராட்கோலி வலது கை பந்துவீச்சாளர்களின் சுவிங் பந்திற்கு ஆட்டமிழப்பதற்கு காரணம், அவர் நிறைய தனது கையின் கீழ்ப்பகுதியை பயன்படுத்தி விளையாடுவதுதான் என்று நினைக்கிறேன். கையின் கீழ்ப்பகுதியை பயன்படுத்தி விளையாடும்போது வழக்கமாகவே தொடக்கத்தில் தடுமாற்றம் இருக்கும்.
அவர் இவற்றில் இருந்து எல்லாம் வெளியில் வர வேண்டும் என்று கருதுகிறேன். அவர் இதில் இருந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். யார் மீது எந்த கசப்பான உணர்வுகளையும் வைத்துக்கொள்ளக்கூடாது. அனைவரையும் மன்னித்து நகர்ந்து செல்ல வேண்டும். இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் எனும் விவகாரத்தில் பி.சி.சி.ஐ. சாமர்த்தியமான முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன்.
2022 உலககோப்பை டி20 போட்டியில் நாங்கள் மீண்டும் இந்திய அணியை மெல்போர்னில் வெல்வோம். டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை விட நாங்கள் சிறந்த அணி.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்தாண்டே பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன், இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்புகளில் இருந்து விராட்கோலி விலகிய போதே ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அவர் நல்ல வெற்றி விகிதம் வைத்திருந்தபோதும் ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கினர். தென்னாப்பிரிக்க தொடர் தோல்விக்கு பிறகு ஏற்பட்ட விமர்சனங்களால் அவரே கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். கடந்த சில மாதங்களாகவே இந்திய அணி நிர்வாகத்திற்கும், விராட்கோலிக்கும் இடையே கடுமையான விரிசல் விழுந்திருப்பதாக தகவல்கள் பரவிவருகிறது.
விராட்கோலியும் தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியினருடன் விலகியே நிற்கிறார் என்றும், அவரது உடல்மொழியிலே அது தெரிவதாகவும் நேற்று பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியாக கூறியிருந்தார். விராட்கோலி கேப்டன்சியை ராஜினாமா செய்ததற்கு அணி நிர்வாகம்தான் காரணம் என்றும் பலரும் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இந்த நிலையில் அக்தரின் குற்றச்சாட்டு இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்கியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்