இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஹாங்காங் அணி இணைந்து ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதம் 27ம் ம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 


ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்தப் போட்டிக்காக இந்திய அணியின் வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பயிற்சிக்கு செல்லும் போது அவருடன் பாகிஸ்தான் வீரர் ஷாஹின் அஃப்ரிதி பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெளியிட்டுள்ளது. 






அந்த வீடியோவில் காயம் அடைந்துள்ள ஷாஹின் அஃப்ரிதியிடன் கோலி நலம் விசாரிக்கிறார். அதைத் தொடர்ந்து கோலி மீண்டும் ஃபார்மிற்கு திரும்ப ஷாஹின் அஃப்ரிதி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. ஷாஹின் அஃப்ரிதி காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். எனினும் அவர் பாகிஸ்தான் அணியுடன் அங்கு பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


ஆசிய கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி புதிய ஜெர்ஸி அணிந்து விளையாட உள்ளது. இதற்கான புதிய போட்டோ ஷூட் இன்று நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. அதற்கு தயாராகும் வகையில் இந்திய அணியின் வீரர் ரவீந்திர ஜடேஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்ஸ் ஒன்றை வைத்துள்ளார். அதில் அவர் புதிய ஜெர்ஸியை அணிந்து இருப்பது போல் படம் உள்ளது. இந்த புதிய ஜெர்ஸி கிட்டதட்ட இந்திய அணி டி20 உலகக் கோப்பைக்கு அணிந்து இருந்த ஜெர்ஸியை போல் அமைந்துள்ளது. இந்த ஜெர்ஸி தொடர்பாக பிசிசிஐ அதிகார்ப்பூர்வமாக பதிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


15 ஆசியக் கோப்பைக்கான தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணிடுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதவுள்ளன. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகிஸ்தான் - இந்திய அணிகளின் அனல் பறக்கும் மோதல் 28ம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கவுள்ள இந்த தொடரானது ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.  குரூப் போட்டிகளின் முடிவில் இரண்டு குரூப்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் விளையாடும்.


சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இம்முறை ஆசிய கோப்பை போட்டிகள் அனைத்தும் டி20 போட்டிகளாக நடைபெற உள்ளன. இதன்காரணமாக இம்முறை ஆசிய கோப்பை தொடருக்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.