சர்வதேச அளவில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் தலைசிறந்த வீரராக வலம் வருபவர் விராட்கோலி. மூன்று வடிவ போட்டிகளிலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள விராட்கோலி, சுமார் 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காமல் இருந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போட்டியில் சதமடித்து தனது மிகப்பெரிய கம்பேக்கை அளித்துள்ளார்.


ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 122 ரன்களை விளாசிய விராட்கோலி, இந்தியாவின் பேட்டிங் முடிந்த பிறகு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, இந்த சதத்தை எனது மனைவி மற்றும் மகளுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக இந்திய அணி தோற்றாலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விராட்கோலி சதம் விளாசியது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளித்துள்ளது.




விராட்கோலியின் அபார சதத்திற்கு ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். விராட்கோலி பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை 2017ம் ஆண்டு திருமணம் செய்தார். விராட்கோலி – அனுஷ்கா தம்பதிக்கு கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி வாமிகா பிறந்தார். மகள் பிறந்த பிறகு விராட்கோலி அடிக்கும் முதல் சதம் இதுவாகும். இதன் காரணமாகவே விராட்கோலி தன்னுடைய சதத்தை மனைவி அனுஷ்கா சர்மாவிற்கும், மகள் வாமிகாவிற்கும் அர்ப்பணித்துள்ளார்.


விராட்கோலி சதமடிக்காத இந்த மூன்று ஆண்டுகளில் அவர் கடுமையான விமர்சனங்களை சந்திக்க நேரிட்டது. இந்திய அணியின் கேப்டன்சி, ஐ.பி.எல். கேப்டன்சிகளை விராட்கோலி துறந்தார். சதமடிக்காவிட்டாலும் ஏராளமான அரைசதங்களை இந்த காலகட்டத்தில் விராட்கோலி விளாசினார். இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் 1000 ரன்களை விளாசும் விராட்கோலி தடுமாறியது ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது.




இந்த சூழலில்தான், விராட்கோலி இந்திய அணியில் இருந்து ஒரு மாத காலம் இடைவெளியில் இருந்தார். ஒரு மாத இடைவெளிக்கு பிறகு ஆசிய கோப்பையில் இந்திய அணிக்காக திரும்பினார். இந்திய அணிக்காக திரும்பிய விராட்கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் போட்டியில் 35 ரன்கள் விளாசினார். ஹாங்காங் அணிக்கு எதிராக அரைசதம் விளாசியதுடன், பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் அரைசதம் விளாசினார். கடந்த போட்டியில் இலங்கைக்கு எதிராக டக் அவுட்டாகினாலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்று சதமடித்து இந்திய ரசிகர்களின் நீண்ட கால ஏக்கத்தை தணித்து வைத்துள்ளார்.


மேலும் படிக்க : Virat Kohli Century: நாயகன் மீண்டும் வரான்! 1021 நாட்களுக்கு பின் சதமடித்த கோலி! இந்திய ரசிகர்கள் செம ஹாப்பி.!


மேலும் படிக்க : Asia Cup 2022, IND vs AFG: ரன்மெஷின் கோலி சதம்..! இந்தியா மிரட்டல் பேட்டிங்..! ஆப்கானுக்கு 213 ரன்கள் இலக்கு.!