இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்காக களமிறங்கி இருந்தாலும், இதுவரை அனில் கும்ப்ளே போல எந்தவொரு வீரரும் இப்படியான சாதனையை செய்தது இல்லை. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான அனில் கும்ப்ளே 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் உலக சாதனை ஒன்றை படைத்தார். இதே நாளில் டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் வீழ்த்தி உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். 


கடந்த 1999ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி டெல்லியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதன்பிறகு எந்த ஒரு இந்திய பந்து வீச்சாளராலும் இதை செய்ய முடியவில்லை. இருப்பினும், அந்த நேரத்தில் இந்த சாதனையை செய்த உலகின் இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியையும் தனியாளாக பெவிலியனுக்கு அனுப்பி கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்திருந்தார் அனில் கும்ப்ளே.






அற்புதம் செய்த அனில் கும்ப்ளே:


1999ம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்தது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில், தொடரை சமன் செய்ய, டெல்லி டெஸ்டில் இந்திய அணி எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. 


இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் முகமது அசாருதீன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். பாகிஸ்தானின் அதிவேக பந்துவீச்சுக்கு முன்னால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இருப்பினும், இதற்குப் பிறகு, இந்திய பந்துவீச்சாளர்களும் அற்புதமாக பந்துவீசி அனுபவமிக்க பாகிஸ்தான் அணியை முதல் இன்னிங்ஸில் வெறும் 172 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தனர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் சிறப்பான முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் அற்புதமாக செயல்பட இந்திய அணி 339 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் பாகிஸ்தானுக்கு 420 ரன்கள் என்ற அபார வெற்றி இலக்கை நிர்ணயித்தது இந்திய அணி. 


இந்தியா நிர்ணயித்த 420 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது. அந்தநேரத்தில், பாகிஸ்தான் அணி இலக்கை எட்டிவிடுமா என்ற பயம் ஏற்பட, பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 101 ரன்களாக இருந்தபோது, அனில் கும்ப்ளே பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டை எடுத்தார். சிறிது நேரத்தில் கும்ப்ளேவின் மாயாஜால சுழலுக்கு முன்னால், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பிக் கொண்டே இருந்தனர்.


முதல் விக்கெட் 101 ரன்களில் விழ, ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியும் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 212 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதேசமயம், அனில் கும்ப்ளே 26.3 ஓவர்களில் 74 ரன்கள் விட்டுகொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது டெஸ்ட் வாழ்க்கையில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.  ஜிம் லேக்கருக்குப் பிறகு உலகின் இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார் அனில் கும்ப்ளே.