Virat Kohli: அடிலெய்ட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தால், விராட் கோலி படைக்கக் கூடிய முக்கிய சாதனை குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட்
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி , 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில், ஜெய்ஷ்வால் மற்றும் கோலியின் அபார சதம் மற்றும் பும்ராவின் அதிரடியான பந்துவீச்சு காரணமாக இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதைதொடர்ந்து, வரும் 6ம் தேதி அடிலெய்டில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இதில் விராட் கோலி வரலாற்று சிறப்புமிக்க ஒரு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
சாதனை படைப்பாரா கோலி?
பெர்த்தில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியின் (பிஜிடி) முதல் டெஸ்டில், விராட் கோலியின் அடித் சதம் ஆஸ்திரேலியாவில் அவரது 10வது சர்வதேச சதமாகும். அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அதிக ரன்களை கடந்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். இந்நிலையில் தான் மீதமுள்ள நான்கு டெஸ்டில் கோலி மேலும் ஒரு சதம் அடித்தால், 76 ஆண்டுகளாக சர் டான் பிராட்மேன் மட்டுமே ஆக்கிரமித்துள்ள ஒரு சாதனை பீடத்தில் கோலிக்கும் இடம் கிடைக்கும்.
டன் பிராட்மேன் சாதனை விவரம்:
1930 மற்றும் 1948 க்கு இடையில் இங்கிலாந்துக்கு எதிராக பிராட்மேன் அடித்த 11 சதங்கள், ஒரு குறிப்பிட்ட நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒரு வீரரால் அடிக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான சதமாகும். அவர் தனது வாழ்க்கையில் 19 போட்டிகளில் 30 இன்னிங்ஸ்களில் இங்கிலாந்து மண்ணில் விளையாடினார். அதில் 102.84 சராசரியுடன், ஒரு போட்டியில் அதிகபட்சமாக 334 ரன்களை சேர்த்துள்ளார். அவர் இங்கிலாந்தில் 11 சதங்கள் போக மூன்று அரை சதங்களையும் அடித்தார்.
கோலி 11வது சதம் விளாசுவரா?
இதற்கிடையில், ஆஸ்திரேலியாவில் கோலியின் 10 சர்வதேச சதங்கள் 2011 முதல் அவர் விளையாடிய 43 போட்டிகளில் இருந்து வந்துள்ளன. ஜாக் ஹோப்ஸ் (ஆஸ்திரேலியாவில் 9 சதங்கள்) மற்றும் சச்சின் டெண்டுல்கர் (இலங்கையில் 9 சதங்கள்) ஆகியோர் இந்த பட்டியலில் கூட்டாக அடுத்த இடத்தைப் பிடித்துள்ளனர். இங்கிலாந்தில் 8 சதங்கள் அடித்த சர் விவியன் ரிச்சர்ட்ஸ், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சுனில் கவாஸ்கரின் 7 சதங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் அடித்த 10 சதங்களில், 2014-15 இந்திய சுற்றுப்பயணத்தின் போது மெல்போர்ன் டெஸ்டில் 169 ரன்களை விளாசியது கோலியின் சிறந்த ஆட்டமாக கருதப்படுகிறது. இதுவரை அந்நாட்டில் 43 போட்டிகளில் 2710 ரன்கள் எடுத்துள்ளார்.
அடிலெய்ட் மைதானமும், கோலியும்
இந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங் அதிகபட்சமாக 1743 ரன்கள் எடுத்துள்ளார். இந்த மைதானத்தில் மட்டும் அவர் 6 சதங்கள் விளாசியுள்ளார். விராட் கோலி இந்த மைதானத்தில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதங்கள் 1 அரைசதத்துடன் 509 ரன்கள் எடுத்துள்ளார். அதகபட்சமாக 141 ரன்கள் எடுத்துள்ளார்.