ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டித் தொடரில் ஆடியது. இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில், ஹைதராபாத் மைதானத்தில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜெய்ஸ்ரீராம் பாடல் ஒலிக்கப்பட்டது போலவும், ரசிகர்களும் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்புவது போலவும் வீடியோ ஒன்றை மெருகு ராஜூ என்பவர் டுவிட்டரில் பதிவிட்டார். அவரது பதிவிற்கு கீழே பலரும் கலவையான கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், ரசகோண்டா காவல்துறையினர் இந்த வீடியோ தொடர்பாக டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளனர். ரசகோண்டா ஏ.டி.ஜி.பி. மகேஷ் முரளிதர் பகவத் “இது சரியில்ல. இந்த சம்பவம் ஹைதராபாத் மைதானத்தில் நடைபெறவில்லை. இதுபோன்ற பொய் பிரசாரம் ஹைதராபாத்தின் பெயரை கெடுக்கிறது. மக்களை தவறாக வழிநடத்தும் இதுபோன்ற பொய் பிரசாரம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.
சிலர் இந்த வீடியோவிற்கு கீழே இந்த சம்பவம் ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் நடைபெறவில்லை. நாக்பூரில் நடைபெற்ற போட்டியின்போது நடைபெற்ற சம்பவம் என்று பதிவிட்டுள்ளனர். பலர் இந்த வீடியோ போலியானது என்று பதிவிட்டுள்ளனர்.
மற்றொரு நபர், இந்த வீடியோவை பதிவிட்ட நபரிடம் மீம்ஸ் கிரியேட்டர்கள் ட்ரோல் செய்வதற்கு முன்பு இந்த வீடியோவை நீக்கிவிடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.