விஜய் ஹசாரே கோப்பையில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை தூக்கியது ஹரியானா அணி. முதலில் பேட்டிங் செய்த ஹரியானா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி வெறும் 257 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டை இழந்து கோப்பையை பறிகொடுத்தது. 


ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 29 பந்துகளில் 38 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது அந்த அணியிடம் 4 விக்கெட்டுகள் எஞ்சியிருந்த போதிலும், அந்த அணி 7 ரன்களுக்குள் கடைசி 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை சந்தித்தது. 


அங்கித் குமார் - அசோக் மனேரியாவின் வலுவான இன்னிங்ஸ்:


இந்தப் போட்டியில், ஹரியானா கேப்டன் அசோக் மனேரியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். பேட்டிங் செய்ய களமிறங்கியபோதே ஹரியானாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் யுவராஜ் ஒரு ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனை தொடர்ந்து, அங்கித் குமார், ஹிமான்ஷு ராணாவுடன் இணைந்து 38 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்து அணிக்கு ஓரளவு ஆதரவளித்தார். அதன்பிறகு அணியின் ஸ்கோர் 41 ரன்களாக இருந்தபோது ஹிமான்ஷு 10 ரன்களுடன் அங்கித் சவுத்ரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இங்கிருந்து அங்கித் குமாரும், கேப்டன் அசோக் மனேரியாவும் 124 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்து ஹரியானாவை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். 


ஹரியானா அணியின் ஸ்கோர் 165 ரன்களாக இருந்தபோது அங்கித் குமார் 91 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து கேப்டன் மனேரியாவும் 70 வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இதற்குப் பிறகு, பின் வரிசை பேட்ஸ்மேன்கள் ஓரளவு ரன்களை சேர்க்க முயற்சி செய்தனர். விக்கெட் கீப்பர் ரோகித் சர்மா (20), நிஷாந்த் சிந்து (29), ராகுல் தெவாடியா (24), சுமித் குமார் 28 ரன்கள் (நாட் அவுட்) எடுத்ததன் மூலம் ஹரியானா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் அங்கித் சவுத்ரி 4 விக்கெட்டும், அராபத் கான் 2 விக்கெட்டும், ராகுல் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.


அபிஜீத் தோமரின் சதம்:


288 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியும் தொடக்கத்தில் மோசமான இன்னிங்ஸை பெற்றது. ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் வெறும் 12 ரன்களாக இருந்தபோது அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இங்கிருந்து தொடக்க வீரர் அபிஜீத் தோமர் ஒரு முனையில் நங்கூரமாய் நின்று சதம் அடித்து நம்பிக்கை அளித்தார். அபிஜீத் தோமருடன் கரண் லம்பா (20) 68 ரன்கள் சேர்த்து இன்னிங்ஸை மெல்ல வெற்றி நோக்கி இழுத்து வந்தார். பின்னர் குணால் சிங் ரத்தோருடன் 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அபிஜீத் ராஜஸ்தானுக்கு வெற்றி நம்பிக்கையைத் தந்தார்.


வெற்றியை நெருங்கிய ராஜஸ்தான் தோல்வி:


ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 201 ரன்களாக இருந்தபோது 106 ரன்கள் எடுத்திருந்த அபிஜீத் அவுட் ஆனார். இங்கிருந்து, க்ருனால் 79 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்ப, ராஜஸ்தான் அணி 237 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து அழுத்தத்தில் இருந்தது. பின்னர் ராகுல் சாஹர் மற்றும் குன்கா அஜய் சிங் மெதுவாக அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். அணியின் ஸ்கோர் 250 ரன்களாக இருந்தபோது குன்கா (8) ஆட்டமிழக்க, அடுத்த 7 ரன்களுக்குள் மேலும் மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்தன. ராகுல் சாஹர் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கடைசி வரை இருந்தார். அனைத்து விக்கெட்டை இழந்து ராஜஸ்தான் தோல்வியை சந்திக்க விஜய் ஹசாரே டிராபியை முதல்முறையாக வென்றது ஹரியானா அணி. 






'போட்டியின் ஆட்டநாயகனாக' சுமித் குமார்:


ஹரியானா தரப்பில் ஹர்ஷல் படேல் மற்றும் சுமித் குமார் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும், அன்ஷுல் மற்றும் ராகுல் தெவாடியா தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இரண்டு பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்ட ஆல்ரவுண்டர் சுமித் குமார் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தப் போட்டியில், அவர் 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்ததுடன், பந்து வீச்சில் 34 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். மேலும், தொடர் ஆட்ட நாயகன் விருதையும் சுமித் குமாரே வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.