வருகின்ற 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதே தனது முக்கிய இலக்கு என்று இந்திய அணிக்காக 2012ம் ஆண்டு அண்டர் 19 உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் உன்முக்த் சந்த் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வுபெற்று தற்போது அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாடி வருகிறார் உன்முக்த் சந்த். 


கடந்த மூன்று ஆண்டுகளாக உன்முக்த் சந்த், ஆண்டுக்கு 10 மாதங்கள் அமெரிக்காவில் தங்கி அங்கு கிரிக்கெட் விளையாடி வருகிறார். இதன்மூலம் அவர் அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாட தகுதி பெற்றுள்ளார். சமீபத்தில் கிரிக்பண்ணிடம் பேசிய உன்முக்த் சந்த், இந்தியாவுக்கு எதிரான விளையாடுவதே எனது முக்கிய குறிக்கோள் என்று பேசியுள்ளார். 


இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “ இந்திய கிரிக்கெட் அணியின் இருந்து ஓய்வு பெற்றதில் இருந்து, இந்திய அணிக்கு எதிராக விளையாட வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோளாக உள்ளது. இதை கெட்ட எண்ணத்திலோ, வேறு எந்த காரணத்திற்காகவே சொல்லவில்லை. இந்தியாதான் உலகின் சிறந்த அணி. அந்த அணியை எதிர்த்து விளையாடி எனது திறமையை வெளிக்காட்ட ஆசைப்படுகிறேன். ” என்று தெரிவித்தார். 


யார் இந்த உன்முக்த் சந்த்..? 


இந்திய அணியின் முன்னாள் வீரர் உன்முக்த் சந்த் தலைமையில் 19 வயதுக்குட்பட்டோர் அணி கடந்த 2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. அதன்பிறகு, உன்முக்த் சந்த் இந்திய அணியின் விராட் கோலிபோல் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 






முதல் தர போட்டிகளில் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தபோதிலும், உன்முக்த் சந்த் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. அதன் பிறகு அவர் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்து அமெரிக்காவில் விளையாடி வந்தார். அங்கு அவரது தலைமையின் கீழ், சிலிக்கான் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி லீக் கிரிக்கெட்டை வென்றது. மேலும், அங்கு அவர் மூன்று பதிப்புகளில் விளையாடி 1500 ரன்களுக்கு மேல் குவித்தார். 


மார்ச் மாதம் அமெரிக்கா அணிக்கு விளையாட தகுதி பெறவுள்ள உன்முக்த் சந்த், ஜூனில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  உன்முக்த் சந்த் வருகின்ற டி20 உலகக் கோப்பை அமெரிக்க அணிக்கு தேர்வு செய்யப்பட்டால், அவர் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவார். 


முன்னதாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் அடங்கிய இந்தியா ‘ஏ’ அணியை  உன்முக்த் சந்த் வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


அமெரிக்க அணியில் ஸ்மித் படேல், ஹர்மீத் சிங்: 


2012 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை உன்முக்த் சந்துடன் இணைந்து வென்ற விக்கெட் கீப்பர் ஸ்மித் படேல் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்மீத் சிங் ஆகியோர் ஏற்கனவே அமெரிக்காவுக்காக விளையாட தகுதி பெற்றுள்ளனர். படேல் இதற்கு முன்பு குஜராத், திரிபுரா மற்றும் பரோடா அணிகளுக்காக விளையாடினார். இவர் 2020 இல் அமெரிக்கா சென்றார்.