ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் வில் புகோவ்ஸ்கி கிரிக்கெட் மைதானத்தில் தொடர்ந்து காயம் அடைவதும், பெவிலியன் திரும்புவதுமாக இருக்கிறார். இந்தநிலையில், நேற்றும் இதேபோல் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 


ஆஸ்திரேலியாவில் விக்டோரியன் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த போது, தெற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் பறந்து வந்த பந்து புகோவ்ஸ்கியின் ஹெல்மெட்டில் பலமாக தாக்கியது. காயமடைந்த பிறகு, அவர் காயத்துடன் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, மைதானத்தை விட்டு வெளியேறினார். 


இதையடுத்து, புகோவ்ஸ்கி நலமுடன் இருப்பதாகவும், மூளையதிர்ச்சி சோதனைக்காக காத்திருப்பதாகவும் கிரிக்கெட் விக்டோரியா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது அப்டேட்டில் அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. தற்போது, இரண்டாவது சோதனை முடிவுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவுக்காக விளையாடும் வில் புகோவ்ஸ்கி, ஆஸ்திரேலியாவின் சர்வதேச அணிக்காக விளையாடியுள்ளார். வில் புகோவ்ஸ்கி 2021 ஜனவரியில் சர்வதேச கிரிக்கெட்டில் தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடினார். அன்று முதல் இன்று வரை அவர் இதுவரை 12 முறை பந்து தாக்குதலில் நிலைகுலைந்துள்ளார். 






என்ன நடந்தது..? 


தெற்கு ஆஸ்திரேலியாபின் வேகப்பந்து வீச்சாளர் டேவியர் கிராண்டின் பவுன்சர் பந்தில் ஹூக் ஷாட் அடிக்க முயற்சி செய்தபோது, ஷாட் மிஸ் ஆகி பந்து நேராக புகோவ்ஸ்கி ஹெல்மெட்டை தாக்கியது. அவருக்கு அப்போது உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்டது. 


பிசியோக்கள் சில நிமிடங்கள் அவரை சோதித்த பிறகு, புகோவ்ஸ்கி மீண்டும் விளையாட அனுமதியளித்தனர். அதன்பிறகு, நான்கு பந்துகளை எதிர்கொண்ட புகோவ்ஸ்கி, ரன் எடுக்க ஓடும்போது தலைசுற்றல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் ஓய்வு பெற கட்டாயம் ஏற்பட்டது. 


12வது முறையாக தலையில் அடி: 


வில் புகோவ்ஸ்கியுடன் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பந்து தலையில் அடிபட்டு மைதானத்தை விட்டு வெளியேறுவது இது 12வது முறையாகும். இதுவரை 12 முறை களத்தில் காயம் அடைந்த வில் புகோவ்ஸ்கி, மனநலக் காரணங்களுக்காக 2022 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க முடிவு செய்திருந்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடம் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் டெஸ்ட் போட்டியில், வில் புகோவ்ஸ்கி இந்தியாவுக்கு எதிராக 62 ரன்கள் எடுத்து மறக்கமுடியாத இன்னிங்ஸை விளையாடினார். ஆனால் அந்த போட்டியிலும் வில் புகோவ்ஸ்கி தோளில் காயம் அடைந்தார். இதற்குப் பிறகு அவருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு பதிலாக மார்கஸ் ஹாரிஸ் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தார். 


வில் புகோவ்ஸ்கி ஆஸ்திரேலியாவின் சிறந்த இளம் பேட்ஸ்மேன்களில் ஒருவராக ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வில் புகோவ்ஸ்கி தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் காயங்களுடன் தொடர்ந்து போராடி வருகிறார். இதன் காரணமாக இவரது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை கேள்விகுறியாக உள்ளது.