Under 19 : 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (அண்டர் 19 உலகக் கோப்பை) வெள்ளிக்கிழமை (இன்று) தொடங்கவுள்ளது. தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து-அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தென்னாப்பிரிக்காவில் இன்று தொடங்கும் இந்த போட்டி 15வது சீசன் இதுவாகும். 50 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் 16 அணிகள் மோதுகின்றன. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனாக இந்திய அணி உள்ளது. இந்த போட்டியில் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை இந்திய வென்றுள்ளது. அதற்கு பிறகு ஆஸ்திரேலிய அணி மூன்று முறை சாம்பியனாகவும், பாகிஸ்தான் அணி இரண்டு முறையும் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது.
ஐந்து முறை (2000, 2008, 2012, 2018, 2022) வென்று சாதனை படைத்த இந்திய அணி, இந்தாண்டும் பட்டத்தை தக்கவைக்க போராடும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக ஆர்வம் காட்டவில்லை என்றாலும், தற்போது இது உலக புகழ் பெற்றுள்ளது. யுவராஜ் (2000), ரோகித் சர்மா (2006), விராட், ஜடேஜா (2008), பண்ட், இஷான் (2016), கில் (2018) ஆகியோர் இந்தப் போட்டியின் மூலம் வெளிச்சத்துக்கு வந்து சர்வதேச அளவில் புகழ் பெற்றவர்கள். ஆனால் இதே போட்டியில் ஜொலித்து வெளிவந்த உன்முக்த் சந்த், மணீஷ் பாண்டே, ரவிகாந்த் சுக்லா, யாஷ் துல், மன்ஜோத் கல்ரா, நாகர்கோட்டி போன்றவர்கள் 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்டாலும் சர்வதேச அளவில் இந்திய அணிக்காக சிறப்பாக ஒன்றும் செயல்படவில்லை.
இந்த உலகக் கோப்பை போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். முன்னதாக, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இலங்கையில் நடைபெற இருந்தது. அப்போது, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்ததை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தென்னாப்பிரிக்காவிற்கு போட்டியை மாற்றியது.
இப்போட்டியில் பங்கேற்கும் 16 அணிகள் நான்கு குழுக்களாக இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு செல்லும். இதில் 12 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் விளையாடும். இந்த அரையிறுதி போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் பெனோனியில் பிப்ரவரி 6 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறும். இறுதிப்போட்டியானது பிப்ரவரி 11ம் தேதி பெனோனியில் நடைபெறும்.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, வங்கதேசம், அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
போட்டி அட்டவணை:
19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்காக உலகக் கோப்பை அணி பிரிவுகள்:
- குழு A : வங்கதேசம் , இந்தியா, அயர்லாந்து, அமெரிக்கா
- குழு B : இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள்
- குழு C : ஆஸ்திரேலியா, நமீபியா, இலங்கை, ஜிம்பாப்வே
- குழு D : ஆப்கானிஸ்தான், நேபாளம், நியூசிலாந்து, பாகிஸ்தான்
இந்திய அணியில் உள்ள வீரர்கள் யார்?
ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முதல் ஆட்டம் ஜனவரி 20-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக நடைபெறவுள்ளது. இந்திய அணியில் அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியான்ஷு மோலியா, முஷீர் கான்,உதய் சஹாரன் ( கேப்டன்), ஆரவெல்லி அவ்னீஷ். ராவ், சௌம்யா குமார் பாண்டே (துணை கேப்டன்), முருகன் அபிஷேக், இனேஷ் மகாஜன், தனுஷ் கவுடா, ஆராத்யா சுக்லா, ராஜ் லிம்பானி மற்றும் நமன் திவாரி.