Harbhajan Gary Kirsten: கேரி கிறிஸ்டின் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக வேண்டும் என,  முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.


கேரி கிறிஸ்டன்:


தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான கேரி கிறிஸ்டின், இந்திய அணியின் வெற்றிகரமான பயிற்சியாளராக இருந்துள்ளார். அவரது வழிகாட்டுதலின் பேரில் தான், கடந்த 2011ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பையை வென்றது. தற்போது கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக உள்ளார். இந்நிலையில், நடந்து வரும் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி, அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோல்வியுற்றதன் விளைவாக லீக் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. இதனால், அந்த அணி மீது கேரி கிறிஸ்டன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.


”பாகிஸ்தான் அணியில் ஒற்றுமையில்லை”


கேரி கிறிஸ்டன் பேசியதாக வெளியாகியுள்ள தகவலின்படி, “பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை, அவர்கள் அதை ஒரு அணி என்று அழைக்கிறார்கள், ஆனால் அது ஒரு அணி அல்ல. அவர்கள் ஒருவரையொருவர் ஆதரிக்கவில்லை. அனைவரும் பிரிந்து, எதிரெதிர் திசையில் செல்கின்றனர். நான் பல அணிகளுடன் சேர்ந்து வேலை செய்துள்ளேன். ஆனால்,  நான் இப்படி ஒரு சூழ்நிலையை பார்த்ததில்லை” என தெரிவித்துள்ளார். கேர் கிறிஸ்டினின் இந்த கருத்துக்கு பலர் ஆதரவாகவும், பலர் எதிராகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.






ஹர்பஜன் சிங் அழைப்பு:


இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “உங்களது நேரத்தை அங்கு வீணடிக்காதீர்கள் கேரி. மீண்டும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாருங்கள். கேரி கிறிஸ்டின் மிகவும் அரிதான பொக்கிஷங்களில் ஒருவர். எங்களது 2011ம் ஆண்டு அணிக்கு ஒரு மகத்துவமான பயிற்சியாளர், ஆலோசகர், நேர்மையான மற்றும் அன்பு மிகுந்த நண்பர். 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று கொடுத்த பயிற்சியாளர். சிறந்த மனிதர் கேரி” என குறிப்பிட்டுள்ளார்.


புதிய பயிற்சியாளர் யார்?


இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பணிக்காலம், டி20 உலகக் கோப்பையுடன் நிறைவடைய உள்ளது. இதனால் புதிய பயிற்சியாளருக்கான தேடலில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், கேரி கிறிஸ்டன் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக வேண்டும் என ஹர்பஜன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.