டி.என்.பி.எல் தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில், மதுரை அணி திருப்பூர் அணியை இன்று எதிர்கொள்கிறது. 


பிளே-ஆஃப் பரபரப்பு:


உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலான நடப்பாண்டு டி.என்.பி.எல். தொடர், கடந்த ஜுன் மாதம் 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் 7 லீக் போட்டிகளில் விளையாடும். மொத்தம் 28 லீக் போட்டிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதில் 26 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்னும் 2 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், ஏற்கனவே 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக முன்னேறிவிட்டன. கடைசி இடத்திற்காக, 3 அணிகள் கடுமையாக முட்டி மோதி வருகின்றன.


தகுதி பெற்ற அணிகள்:


கோவை மற்றும் திண்டுக்கல் அணிகள் தலா 7 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்று முதல் 2 இடங்களை பிடித்து பிளே-ஆஃப் சுற்றுக்கான தங்களது வாய்ப்பை உறுதி செய்துள்ளது. நெல்லை அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள ஒரு போட்டியில் வென்றாலும், தோற்றாலும் கூட அந்த அணிக்கு புள்ளிப்பட்டியலில் 3வது இடம் என்பது உறுதியாகிவிட்டது.


மல்லுக்கட்டும் 3 அணிகள்:


சேப்பாக் அணி 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இந்த அணி இனி பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்வது என்பது மீதமுள்ள இரண்டு போட்டிகளின் முடிவை பொறுத்தே அமையும். மதுரை மற்றும் திருப்பூர் ஆகிய அணிகள் 6 போட்டிகளில் விளையாடி முறையே தலா 3 மற்றும் 2 வெற்றிகளை பெற்றுள்ளன.  இதனால், இன்று நடைபெறும் போட்டி தான், பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நான்காவது அணி யார் என்பதை உறுதி செய்ய உள்ளது.


மதுரை - திருப்பூர் மோதல்:


இன்றைய முக்கியமான ஆட்டத்தில் இரவு 7.15 மணிக்கு தொடங்கும் போட்டியில் மதுரை பாந்தர்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் மதுரை பாந்தர்ஸ் வெற்றி கண்டால் 8 புள்ளியுடன் எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறும். மாறாக மதுரை தோல்வி அடைந்தால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை, திருப்பூர் தமிழன்ஸ் மூன்று அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (0.683) அணி வலுவாக இருப்பதால் அந்த அணிக்கு பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறக்கூடும்.


கடைசி லீக் போட்டி:


நாளை நடைபெற உள்ள கடைசி லீக் போட்டியில் திருச்சி மற்றும் நெல்லை அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியின் முடிவு புள்ளிப்பட்டியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த தொடரில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியடைந்த திருச்சி அணி, கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெறவேண்டும் என்ற முனைப்பில் களமிறங்க உள்ளது.