நடப்பாண்டிற்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் கோவையில் இன்று தொடங்குகிறது. இதில் 8 அணிகள் மோத உள்ளன.
டி.என்.பி.எல்:
உள்ளூர் வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் தொடர் கடந்த 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் நடப்பாண்டிற்கான டி.என்.பி.எல். தொடர் கோவையில் இன்று தொடங்கி, ஜூலை 12ம் தேதி வரை திண்டுக்கல், சேலம் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
8 அணிகளின் விவரங்கள்:
இந்த தொடரில் நடப்பு சாம்பியன்களான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், முன்னாள் சாம்பியனான மதுரை பாந்தர்ஸ் ஆகியவற்றுடன் நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், பால்சி திருச்சி மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இந்த தொடரில் தான் முதல் முறையாக ஐ.பி.எல். போட்டியை போல வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டனர். கடந்த 6 தொடரில் வரைவு முறையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. லீக் சுற்றில் கோவையில் 6 போட்டிகளும், திண்டுக்கல்லில் 7 போட்டிகளும், சேலத்தில் 8 போட்டிகளும் மற்றும் நெல்லையில் 7 போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
போட்டி விவரங்கள்:
தொடரில் 28 லீக் போட்டிகள் உள்பட மொத்தம் 32 போட்டிகள் 25 தினங்களில் நடக்கிறது. 7 நாட்களில் மட்டும் 2 போட்டிகள் நடைபெற உள்ளன. லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். ஜூலை 5ம் தேதி லீக் சுற்று முடிவடைகிறது. ஜூலை 7ம் தேதி பிளே ஆப் சுற்று போட்டிகள் தொடங்குகிறது. அன்று முதல் தகுதி சுற்றும் (குவாலி பையர்-1), 8-ம் தேதி வெளியேற்றுதல் ஆட்டமும் (எலிமினேட்டர்) சேலத்தில் நடக்கிறது. 2- வது தகுதி சுற்று (குவாலி பையர் -2) 10-ம் தேதியும், இறுதிப் போட்டி 12-ம் தேதியும் நெல்லையில் நடைபெறுகிறது.
புதிய விதிகள்:
நடப்பாண்டு டி.என்.பி.எல். தொடரில் ஐ.பி.எல்.லை போன்று இம்பேக்ட் பிளேயர் விதி அறிமுகம் செய்யப்படுகிறது. நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறையும் முதல் முறையாக பயன்படுத்தப்பட உள்ளது. அதே நேரத்தில் வைட், நோபால் டி.ஆர்.எஸ். முறையில் கொண்டு வரப்படமாட்டாது. பிளேஆப் சுற்றின் 3 ஆட்டமும், இறுதிப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்றுதினத்தில் (ரிசர்வ் டே) நடைபெறும்.
பரிசுத்தொகை விவரம்:
இந்த தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.1.7 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்படும். 3 மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும். 5 முதல் 8-வது இடங்களுக்கு தலா ரூ.12.5 லட்சம் வழங்கப்படும். இந்த போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்.டி சேனல்களில் டி.என்.பி.எல் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
டி.என்.பி.எல். வரலாறு:
6 முறை நடைபெற்றுள்ள டி.என்.பி. எல். வரலாற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அதிகபட்சமாக 4 முறை (2017, 2019, 2021, 2022) கோப்பையை வென்றுள்ளது. கடந்த முறை கோவை கிங்சுடன் இணைந்து கூட்டாக பட்டம் பெற்றது. டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018), கோவை கிங்ஸ் (2022) ஆகிய அணிகள் தலா ஒரு தடவை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.