ஐசிசி தொடர்களில் இந்திய அணி தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் சம்மேளனத்தை (பிசிசிஐ) ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


10 வருடங்களாக தொடர் தோல்வி:


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்று, கோப்பையை வெல்லும் வாய்ப்பை தொடர்ந்து இரண்டாவது முறையாக கோட்டைவிட்டுள்ளது. இதுவொன்றும் முதல்முறையாக நடைபெறவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஐசிசி நடத்திய 9 தொடர்களில் ஒன்றில் கூட இந்திய அணி வென்றதில்லை. தோனி, கோலி மற்றும் ரோகித் சர்மா என 3 கேப்டன்கள் மாறியும், இந்திய அணியால் கோப்பையை நுகர முடியவில்லை.


விளாசும் ரசிகர்கள்:


இந்த தொடர் தோல்விகளால் துவண்டு போன ரசிகர்கள், சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நட்சத்திர வீரர்களின் செயல்பாடு மட்டுமின்றி, கேப்டன், நட்சத்திர வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் இந்திய கிரிக்கெட் சம்மேளனத்தையும் கடுமையாக சாடி வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் தொடருக்கு தயாராக இந்திய அணிக்கு போதிய கால அவகாசத்தை பிசிசிஐ வழங்கவில்லை எனவும், பணம் கொட்டும் ஐபிஎல் தொடருக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.


பணம் தான் முக்கியமா?


ஸ்டார்க் மற்றும் பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் சர்வதேச போட்டிகளில் அவரவர் நாட்டிற்காக விளையாட, பல லீக் போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து வருகின்றனர். முக்கிய போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பு, காயம் ஏதும் ஏற்படுவதை தவிர்க்கவும், நல்ல உடல் தகுதியுடன் இருப்பதற்காகவும் முன்னெச்சரிக்கையுடன், லீக் போட்டிகளில் விளையாடமல் இருந்து வருகின்றனர். ஆனால், இந்தியாவை சேர்ந்த எந்தவொரு வீரரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் போன்ற எந்தவொரு ஐசிசி தொடருக்கும் தயாராகும் வகையில்,  இதுவரை எந்தவொரு ஐபிஎல் தொடரிலும் விளையாடாமல் இருந்ததில்லை. அதிலும், சிலர் காயம் இருந்தாலும் பரவாயில்லை என மைதானத்திற்கு வந்து விளையாடியது உண்டு. இதற்கு சிறந்த உதாரணம் அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், லக்னோ அணிக்கு கேப்டனாக செயல்பட்ட கே.எல். ராகுலுக்கு நடக்க கூட முடியாத அளவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. அப்படி இருந்தும் அவர் பேட்டிங் செய்தார். சிஎஸ்கே அணி வீரர் சாஹர், தன்னுடைய காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை, இருந்தாலும் நான் சென்னை அணிக்காக விளையாடி வருகிறேன் என வெளிப்படையாக பேசி இருந்தார். எனில், இவர்களுக்கு இந்திய அணிக்காக விளையாடுவதை காட்டிலும், பணத்திற்காக ஐபிஎல் அணிகளுக்காக விளையாடுவது தான் முக்கியமா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதோடு, ஸ்டார்க், ஸ்டோக்ஸ் போன்ற வீரர்களை பார்த்து, இந்திய வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.


பிசிசிஐ என்ன தான் செய்றீங்க?


கடந்த முறையே இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஸிப் தொடரின் இறுதிப்போட்டியில், பேட்டிங்கில் சொதப்பியதால் தான் நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வியுற்றது. அப்படி இருக்கையில் இந்த முறை சற்று முன்கூட்டிய, இந்திய அணி வீரர்களை இங்கிலாந்திற்கு அனுப்பி போதிய பயிற்சியை மேற்கொள்ள நேரம் கொடுத்து இருக்க வேண்டும். ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பு வரை ஐபிஎல் தொடரை விளையாட வைத்துவிட்டு, உடனடியாக இங்கிலாந்திற்கு சென்று டெஸ்ட் போட்டியில் விளையாட சொல்வது எப்படி நியாயமாகும். ஐபிஎல் தொடரை போன்று 20 பந்துகளை எதிர்கொண்டு அதிரடியாக ரன் குவிப்பது அல்ல டெஸ்ட் போட்டி. நிலையான எண்ணம் மற்றும் மன உறுதி இல்லாமல், ஒன்றரை நாட்கள் பீல்டிங் செய்து விட்டு அப்படியே வந்து பேட்டிங் செய்வது என்பது நடக்காத காரியம். அதற்கு போதிய பயிற்சி மற்றும் நேரம் என்பது அவசியம். அதோடு, ரோகித், கோலி போன்ற நட்சத்திர வீரர்களுக்கே ஷார்ட் பால் போன்ற பிரச்னைகள் இருக்கிறது. அப்படி இருக்கையில் போதிய பயிற்சியே இல்லாமல், இங்கிலாந்தின் மைதானங்களில் நல்ல அனுபவம் வாய்ந்த வலுவான ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை, இந்திய வீரர்களால் எதிர்கொள்ள முடியும் என எந்த வகையில் பிசிசிஐ நம்பியது என பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்புகின்றனர்..


“என்னதான் இந்தியாவிற்காக என்ற பெயரில் 11 பேர் கொண்ட அணியை களமிறக்கினாலும், பிசிசிஐ என்பது இப்போதும் ஒரு தனியார் அமைப்பு தான். எனவே, என்னதான் ரசிகர்கள் கூப்பாடு போட்டு கத்தினாலும் அந்த அமைப்பு லாப நோக்கத்தில் செயல்படுமே தவிர, கவுரவம் என்பதற்காக எதையும் செய்யப்போவதில்லை.” என ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.