ஐ.பி.எல். தொடரை போலவே தமிழ்நாடு அளவில் கிரிக்கெட் போட்டிகளை ஊக்குவிப்பதற்காக டி.என்.பி.எல். தொடர் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான டி.என்.பி.எல். தொடர் நேற்று தொடங்கியது. கோயம்புத்தூரில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் – ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.


கோவை - திருப்பூர்


டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைடுத்து, ஆட்டத்தை தொடங்கிய கோவை அணிக்கு சுரேஷ்குமார் அதிரடி தொடக்கம் அளிக்க முயற்சித்தார். 8 பந்துகளில் 1 சிக்ஸருடன் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் புவனேஸ்வரன் பந்தில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் சச்சினும் 2 ரன்னில் அவுட்டாக அடுத்து வந்த ராம் அரவிந்த் டக் அவுட்டானார்.


14 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து கோவை தடுமாறியபோது ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் கலக்கிய சாய் சுதர்சன் – முகிலேஷ் ஜோடி சேர்ந்தனர். முகிலேஷ் நிதானமாக ஆட மறுமுனையில் சாய் சுதர்சன் அதிரடிக்கு மாறினார்.


மிரட்டிய சாய் சுதர்சன்:


96 ரன்களை எட்டியபோது சிறப்பாக ஆடி வந்த முகிலேஷ் 32 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து வந்த ஆதீக்கும் 9 ரன்களில் அவுட்டாக, கேப்டன் ஷாருக்கான் களமிறங்கினார். மறுமுனையில் சாய் சுதர்சன் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசியதால் ரன்கள் எகிறத் தொடங்கியது. கேப்டன் ஷாருக்கானும் 15 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 25 ரன்களை எடுக்க கடைசியில் 20 ஓவர்களில் கோவை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை குவித்தது.  சாய் சுதர்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 8 பவுண்டரி 4 சிக்ஸருடன் 86 ரன்கள் எடுத்தார்.  


180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணிக்காக துஷார் – சதுர்வேத் களமிறங்கினர். சதுர்வேத் 4 ரன்களில் அவுட்டாக விஷால் வைத்யா – துஷார் நிதானமாக ஆடினர். நிதானமாக ஆடிய இவர்கள் 5.2 ஓவர்களில் 42 ரன்களை எடுத்தபோது பிரிந்தனர். விஷால் வைத்யா 16 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து, விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்தது. ஐ.பி.எல். தொடரில் மிரட்டிய விஜய்சங்கர் 2 ரன்களில் அவுட்டாக, கேப்டன் சாய் கிஷோர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.


கோவை வெற்றி:


ஒற்றை இலக்கத்திலே ஒவ்வொரு வீரராக ஆட்டமிழக்க தொடக்க வீரராக இறங்கி போராடிய துஷார் இறுதியில் 8வது விக்கெட்டாக வெளியேறினார். துஷார் ரஹேஜா 33 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாகி ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் 109 ரன்களுக்கு திருப்பூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் கோவை அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 


கோவை அணிக்காக அந்த அணியின் கேப்டன் ஷாருக்கான் பந்துவீசி 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது 2 ரன்களையும், கிரன் ஆகாஷ், முகிலேஷ், ஜடாவேத், கவுதம் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.