நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவருமானவர் டிம் சவுதி. 36 வயதான சவுதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து  ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்தார்.


கடைசி டெஸ்டில் ஆடும் டிம் சவுதி:


இதையடுத்து, தனது கிரிக்கெட் டெஸ்ட் தொடரை அவர் தற்போது ஆடி வருகிறார். நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்று வருகிறது.


இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணிக்காக கேப்டன் லாதம் சிறப்பாக ஆடினார். அவருக்கு வில் யங்கும் ஒத்துழைப்பு அளித்தார். லாதம் 63 ரன்களுக்கும், வில் யங்கும் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

சவுதியின் சிக்ஸர் மழை:


மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் 9வது விக்கெட்டிற்கு டிம் சவுதி களமிறங்கினார். கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடும் சவுதி பேட்டிங்கில் மிரட்டினார். அவர் களமிறங்கியதும் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான பேட்டிங்கை அவ்வப்போது வெளிப்படுத்தி வரும் டிம் சவுதி வெறும் 10 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 23 ரன்கள் எடுத்தார். இதனால், 300 ரன்களை கடக்குமா? என்று இருந்த நியூசிலாந்து அணி எளிதாக 300 ரன்களை கடந்தது.


தனது கடைசி டெஸ்ட் போட்டியில் 3 சிக்ஸர்களை விளாசிய சவுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் தற்போது 5வது இடத்தில் உள்ளார். தற்போது வரை 98 சிக்ஸர்களை அவர் விளாசியுள்ளார். இந்த போட்டியில் 3 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் புகழ்பெற்ற ஆல்ரவுண்டர் ஜேக் காலிசை பின்னுக்குத் தள்ளினார்.


இந்த பட்டியலில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென்ஸ்டோக்ஸ் 133 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் பிரண்டன் மெக்கல்லம் உள்ளார். இந்திய வீரர்களில் அதிக சிக்ஸர் அடித்த பெருமையை  சேவாக் தன்வசம் வைத்துள்ளார். அவர் 97 சிக்ஸருடன் 7வது இடத்தில் உள்ளார்.


டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்:



  • பென் ஸ்டோக்ஸ் – 133 சிக்ஸர்கள்

  • மெக்கல்லம் – 107 சிக்ஸர்கள்

  • ஆடம் கில்கிறிஸ்ட் – 100 சிக்ஸர்கள்

  • கெயில் – 98 சிக்ஸர்கள்

  • டிம் சவுதி – 98 சிக்ஸர்கள்

  • ஜேக் காலீஸ் – 97 சிக்ஸர்கள்

  • சேவாக் – 91 சிக்ஸர்கள்

  • ப்ரையன் லாரா – 88 சிக்ஸர்கள்

  • மேத்யூஸ் – 88 சிக்ஸர்கள்

  • ரோகித் சர்மா – 88 சிக்ஸர்கள்


தற்போது கிரிக்கெட் ஆடும் வீரர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் பென் ஸ்டோக்ஸிற்கு பிறகு அதிக சிக்ஸர் அடித்த வீரராக உள்ளார் டிம் சவுதி. 2008ம் ஆண்டு முதல் கிரிக்கெட் ஆடி வரும் டிம் சவுதி இதுவரை 107 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 243 ரன்கள் எடுத்துள்ளார். 161 ஒருநாள் போட்டிகளில் ஆடி 742 ரன்களும், 125 டி20 போட்டிகளில் ஆடி 303 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 389 விக்கெட்டுகளும்,, ஒருநாள் போட்டியில் 221 விக்கெட்டுகளும், டி20 போட்டியில் 164 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் 54 போட்டிகளில் ஆடி 120 ரன்களும், 47 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.