ஆஷஸ் மூன்றாவது டெஸ்ட் போட்டி
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்து தொடர்களை கொண்ட ஆஷஸ் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லே மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று மதியம் 3:30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் இரு அணிகளும் அதிரடியான மாற்றத்தை கொண்டுவந்துள்ளனர். இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஒல்லி போப், ஜோஷ்டங்கு அகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ், மொயீன் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். லேசான தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வந்த ஆஸ்திரேலியா அணியின் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு இவர்களுக்கு பதிலாக டாட் மர்பி, ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டனர்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டொக்ஸ் ஆஸ்திரேலியா அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா போட்டியை தொடங்கினர். ஆட்டம் ஆரம்பித்த முதல் ஓவரிலே ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தை ஜாக் கிராவ்லியிடம் கேட்ச் கொடுத்து வார்னர் 4 ரன்களுக்கு அவுட் ஆனார். உஸ்மான் கவாஜா (13), மார்னஸ் லபுஷேன் (21), ஸ்டீவன் ஸ்மித் (22) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்டீவன் ஸ்மித்துக்கு இது 100 வது டெஸ்ட் போட்டி என்பதால் அவர் ஆட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு அவர் ஏமாற்றத்தையே தந்தார். 85 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறி கொண்டிருந்த ஆஸ்திரேலியா அணியை சரிவில் இருந்து மீட்டது டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் ஜோடி
மிட்செல் மார்ஷ் சதம்
ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலியா அணியை சரிவில் இருந்து மீட்டார். இவருக்கு துணையாக மறுமுனையில் டிராவிஸ் ஹெட் கட்டை போட்டு கொண்டிருந்தார். அதிரடியாக ஆடிய மிட்செல் மார்ஷ் 118 பந்துகளில் 17 பவுண்டரிகள் 4 சிக்சருடன் 118 ரன்கள் எடுத்து கிறிஸ் வோக்ஸ்சிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இவர்களின் பார்ட்னர்ஷிப் 155 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 240 என்ற மதிக்கதக்க ரன்னை அடைந்தது. மிட்செல் மார்ஷ்சை தொடர்ந்து டிராவிஸ் ஹெட்டும் 245 ரன்கள் இருக்கும் போது இங்கிலாந்து பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் அவரை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் . பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா அணி 60.4 ஓவரில் 263 ஆல் அவுட் ஆனது.
முதல் நாளிலேயே முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து
முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று அனைவராலும் எதிர்பார்க்க பட்ட நிலையில் பென் டக்கெட் 2 ரன்னிலும்,அவர் பின் களமிறங்கிய ஹாரி புரூக் மூன்று ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி சற்று நேரம் தாக்குப்பிடித்து 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் மூன்று விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. ஜோ ரூட்(19) மற்றும் ஜானி பேர்ஸ்டோ (1) களத்தில் உள்ளனர். இன்று இரண்டவது நாள் பிற்பகல் இந்திய நேரப்படி 3:30 தொடங்கும்.