தான் கடத்தப்பட்ட கதையை ஓராண்டுக்கு பின் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டூவர்ட் மெக்கில் நினைவு கூர்ந்துள்ளார். 


கடந்த 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 44 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடியவர் ஸ்டூவர்ட் மெக்கில். இவர் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் சமீபத்தில் மறைந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னேவுக்கு அடுத்தப்படியாக 208 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். ஸ்டூவர்ட் மெக்கில் கடந்த 2008 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 




ஆனாலும் பிக்பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக 2011 ஆம் ஆண்டு வரை ஆடிய மெக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சிட்னியின் க்ரெமானில் உள்ள அவரது வீட்டில் இருந்து இரவு 8 மணியளவில் 4 மர்ம நபர்களால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அடுத்த சில மணிநேரத்தில் மெக்கில்லை கடத்திச் சென்ற அந்த கும்பல் பெல்மோர் பகுதியில் அவரை இறக்கி விட்டு சென்றது. 


இதுதொடர்பாக நியூ சவுத்வேல்ஸ் போலீஸாரிடம் மெக்கில் புகாரளித்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து 27,29,42, மற்றும் 46 வயதுள்ள 4 பேரை கடந்தாண்டு மே 5 ஆம் தேதி கைது செய்தனர். இதில் ஒருவர் மெக்கிலின் வியாபார கூட்டாளியான மரியா ஓ' மேகரின் சகோதரரான மரினோ சோடிரோபொலோஸ் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் கடத்தப்பட்ட அன்று என்ன நடந்தது என்பதை ஓராண்டுக்கு பின் ஸ்டூவர்ட் மெக்கில் நினைவு கூர்ந்துள்ளார். 




அதில் தான் சிட்னியில் உள்ள வீட்டில் கடத்தப்பட்டவுடன் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன். அது சிறிய கொட்டகையாக இருக்கலாம் என நினைக்கிறேன். அங்கு சுமார் 3 மணி நேரம் இருந்த என்னை நிர்வாணமாக்கி கடத்தல்காரர்கள் அடித்து உதைத்தனர். மேலும் துப்பாக்கி முனையில் மிரட்டினர். பின்னர் அங்கிருந்து காரில் என்னை அழைத்து செல்லப்பட்டு பெல்மோர் பகுதியில் தூக்கி எறிந்தனர். 


அப்போது எனக்கு எங்கிருக்கேன் என தெரியாது. ஆனால் நான் காரில் ஏறமாட்டேன் என 2,3 முறை தெரிவித்த நிலையில் கடத்தல்காரர்கல் ஆயுதம் வைத்திருந்ததை தன்னால் காண முடிந்தது என ஸ்டூவர்ட் மெக்கில் தெரிவித்துள்ளார். இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண