பாகிஸ்தானில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், ராவல்பிண்டி, முல்தான் ஆகிய இரு இடங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. பல ஆன்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானில் விளையாட அணிகள் ஆர்வம் காட்டும் நிலையில் இந்த டெஸ்ட் தொடர் ஒரு முன்னோட்டமாக உள்ளது.
பாதுகாப்பு காரணமாக சுமார் 15 ஆண்டுகள் பாகிஸ்தான் சென்று விளையாடாமல் இருந்த இங்கிலாந்து அணி தற்போது சுற்றுப் பயணம் செய்து கடந்த போட்டியோடு தொடரையும் வென்றுள்ளது. சொந்த மண்ணில் விளையாடும் பாகிஸ்தான் அணியில் தோல்வியை அந்நாட்டு ரசிகர்கள் சிறிதும் எதிர்பார்க்காத நிலையில் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். பாகிஸ்தானின் இந்த தொடர் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கத் தவறியதுதான் முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது.
சீனியர் வீரர்கள் ஃபார்ம்
அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விடுவதால், பாகிஸ்தான் அதன்பின் குறைந்த ஸ்கோரில் ஆல்-அவுட் ஆகி விடுகிறது. இதுவே பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. டெஸ்டில் மட்டுமல்ல, டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் அவர்களுடைய மோசமான ஃபார்ம், பாகிஸ்தான் அணிக்கு பெரும் பாரமாக இருந்து வருகிறது. நேற்றோடு முடிவடைந்த முல்தான் டெஸ்ட் போட்டியிலும் அதே கதைதான்.
நிருபர் கேள்வி
முல்தான் டெஸ்ட் தொற்று, தொடரை இழந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஒரு பத்திரிகையாளர், "பாபர் அசாம், ரிஸ்வான் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என ரசிகர்கள் கருதுகிறார்களே, அணியின் ஸ்கோர் உங்கள் இருவரையும் சார்ந்து இருப்பதுதானே அதற்கு காரணம்?", என்று கேள்வியை எழுப்பினார்.
கோபமடைந்த பாபர்
கேள்வியை பத்திரிகையாளர் முடிப்பதற்குள், பாபர் ஆசம் கோபம் அடைந்தார். கோபத்தில் அவர், ''ஆக, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? நாங்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்றா?'' என ஆவேசமாக கேட்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத பத்திரிகையாளர், ''இல்லை, இந்த விசயத்தில் உங்களுடைய கருத்து என்ன என்பதை தான் கேட்டேன். உங்கள் வீரர்கள் டி20-யில் விளையாட வேண்டுமா?'' என்றார். இது தொடர்பான கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த பாபர் அசாம், ''நான் அப்படி ஒன்றும் நினைக்கவில்லை'', என்று ஷார்ட்டாக கூறி கடந்து சென்றார். இந்த செய்தியை கேட்கும் ரசிகர்கள் என்ன இருந்தாலும் நியாயமாகதானே கேட்டார் என்பது போல பேசி வருகின்றனர்.
கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் பாபர் அசாம் இரண்டாவது இன்னிங்சில் இரண்டு முறையுமே ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தார். ரிஸ்வான் இரண்டு போட்டிகளில் நான்கு இன்னிங்சில் சேர்த்தே 115 ரன்கள் தான் குவித்துள்ளார். மற்ற வீரர்களான இமாம் உல் ஹக், சவுத் ஷகீல் போன்றவர்கள் உத்வேகத்துடன் விளையாடி ரன் குவிக்கும்போதிலும் சீனியர் வீரர்களான இவர்களிடம் இருந்து சப்போர்ட் வராததால் வெற்றியில் பின்னடைவு ஏற்படுகிறது என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.