கிரிக்கெட் உலகையே கட்டி ஆண்டுக்கொண்டிருந்த மேற்கிந்திய தீவுகள் அணி, இன்று ஐசிசி உலகக்கோப்பை தொடருக்கே தகுதி பெற முடியாமல் வெளியேறி உள்ளது. இதனால், மேற்கிந்திய தீவுகள் அணி இல்லாமல், வரலாற்றில் முதன்முறயாக ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
”Once up on a time, there lived a GHOST என விக்ரம் படத்தில் ஒரு வசனம் வரும். அந்த வசனத்துக்கு கிரிக்கெட் உலகில் உண்மையான உதாரணத்தை தேடினால், அனைத்து வரலாறுமே மேற்கிந்திய தீவுகள் அணியை தான் சுட்டிக்காட்டும். காரணம் வேறு எந்த அணியை காட்டிலும் மிக நீண்ட காலத்திற்கு தனது அசுர பலத்தால் கிரிக்கெட் உலகையே தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது மேற்கிந்திய தீவுகள் அணி தான். ஆனால், நடப்பாண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு தகுதி கூட பெற முடியாமல் வெளியேறி, கழுதை கட்டெறும்பாய் தேய்ந்த கதையாய் மாறியுள்ளது மேற்கிந்திய தீவுகள் அணியின் நிலைமை ”
வெற்றியை விட்டுக்கொடுக்காத மேற்கிந்திய தீவுகள் அணி:
80-கள் தொடங்கி ஆஜானுபாகுவானாக 6 அடி உயரத்தில் மைதானத்திற்குள் வரும் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த வீரர்களை கண்டாலே எதிரணிக்கு ஒருவித அச்சம் தொற்றிக்கொள்ளும். அதையும் தாண்டி கிரிக்கெட்டில் பந்துவீச்சு மற்றும் பவுலிங் என இரண்டிலும் அவர்கள் வெளிப்படுத்திய அபாரமான திறமை மற்ற அணிகள் இடையே கிலியை ஏற்படுத்தியது. இதனால், கிரிக்கெட் உலகில் வெற்றி என்றாலே அது எங்களுக்கானது மட்டுமே எனும் விதமாக 2 தசாப்தங்களாக கோலோச்சியது.
தோல்வியா அப்டினா..!
1980-களில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோல்வியையே சந்திக்கவில்லை. 90-களில் அதே நிலைமை தொடர, 43 போட்டிகளில் வெற்றி பெற்றும் வெறும் 8 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்தது. ஒருநாள் தொடரிலும் இந்த ஆதிக்கம் தொடர்ந்தது.1970 மற்றும் 80-களில் 139 வெற்றிகளையும், வெறும் 52 தோல்விகளையும் மட்டுமே சந்தித்த மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் இரண்டு ஒருநாள் உலகக்கோப்பையையும் தனதாக்கியது. மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றி தோல்வி விகிதம் என்பது 2.67 ஆக இருந்த நிலையில், மற்ற அணிகளால் 1.3-ஐ கூட எட்ட முடியவில்லை.
எமனாக தோன்றிய மேற்கிந்திய வீரர்கள்:
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியை காட்டிலும் வேறு யாரும் இந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தியது இல்லை. அதற்கு முக்கிய காரணம் அந்த அணியில் அடுத்தடுத்து அறிமுகமான நட்சத்திர வீரர்கள் தான். கோர்டன் க்ரீனிட்ஜ் மற்றும் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் ஆகியோரை தொடர்ந்து, விவ் ரிச்சர்ட்ஸ் மற்றும் கிளைவ் லாயிட் ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் நட்சத்திரங்களாக திகழ்ந்தனர்.
அவர்களுக்கு உறுதுணையாக மைக்கேல் ஹோல்டிங், ஜோயல் கார்னர், கர்ட்லி ஆம்ப்ரூஸ், கர்ட்னி வால்ஸ், மால்கம் மார்ஷல், ஆண்டி ராபர்ட்ஸ் என அடுத்தடுத்து அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி உயிர் பயம் காட்டினர். இவர்கள் அனைவருமே ஒரு குழுவாக மேட்ச் வின்னிங் பிளேயர்களாக திகழ்ந்தனர்.
தொடங்கிய சரிவு:
வயது மூப்பு காரணமாக நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து விலக 1990-களில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சரிவு தொடங்கியது. வெற்றி என்பது முன்பு இருந்ததை போல எளிதானதாக அந்த அணிக்கு கிடைக்கவில்லை. பிரையன் லாரா, சந்தர்பால் மற்றும் கெயில் போன்ற மேட்ச் வின்னிங் வீரர்கள் அறிமுகமானாலும், ஒரு குழுவாக அவர்களால் வெற்றியை எட்டமுடியவில்லை. 1990களிலும், 2000களின் பெரும்பகுதியிலும், 1980களின் தலைமுறை ரசிகர்கள் அணியின் மறுமலர்ச்சிக்காக ஏங்கிப் பெருமூச்சு விட்டனர். ஆனால், தனிநபர்களின் அபார ஆட்டம் ஒரு சில வெற்றிகளை பெற்றுக் கொடுத்தாலும், முன்பு இருந்த நிலையை அந்த அணியால் எட்டமுடியவில்லை.
அடுத்தடுத்து விழுந்த அடி:
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சம்மேளனத்துடனான வீரர்களின் தொடர் மோதல், பல ஆண்டுகளாக மாறாமல் இருந்த ஊதியத்தால் ஏற்பட்ட பிரச்னை ஆகியவை அந்த அணியின் பெரிய சிக்கலாக மாறியது. முன்பு இருந்ததை போன்று ரசிகர்கள் போட்டிகளை காண மைதானங்களில் குவியவில்லை.
நம்பிக்கை தந்த டி-20 தொடர்:
நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த அந்த நம்பிக்கையானது கிரிக்கெட்டின் புதிய வடிவம் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கிடைத்தது. 16 அணிகள் அடங்கிய ஸ்டான்ஃபோர்ட் டி-20 கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பெரும் வெற்றி பெற்றதோடு, இளம் திறமையாளர்களை கண்டறியவும் உதவியது. இந்த டி-20 தொடர் உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைய, பல்வேறு நாடுகளும் டி-20 தொடர்களை அறிமுகபடுத்தின.
அங்கு மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த அதிரடி வீரர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஊதியமும் கோடிகளில் கொட்டிக் கொடுக்கப்பட்டது. இதனால், வருவாய்க்காக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சம்மேளனத்தை சார்ந்து இருப்பதை காட்டிலும், வெளிநாடுகளில் நடைபெறும் உள்ளூர் தொடர்களில் விளையாட அவர்கள் அதிக ஆர்வம் காட்டினார். டெஸ்ட் போட்டிகளில் விளையாடவும் ஆர்வம் காட்டவில்லை.
மீண்டும் மிரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி:
டி-20 போட்டிகளின் பிரமாண்ட வளர்ச்சியை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமும் 2007ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை தொடரை அறிமுகப்படுத்தியது. அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன மேற்கிந்திய திவுகள் அணி வீரர்கள், இந்த வாய்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளூர் ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தினர். 2012 மற்றும் 2016ம் ஆண்டுகளில் டேரன் சமி தலைமையில் டி-20 உலகக்கோப்பையை வென்று தங்களது திறமையை உலக நாடுகளுக்கு மீண்டும் உணர்த்தினர்.
கவனம் ஈர்த்த வீரர்கள் - மீண்டும் வந்த சரிவு:
சாமுவேல் பத்ரீ, டுவைன் பிராவோ, கீரன் பொல்லார்ட், கெய்ல், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் ஆகியோர் புதுவடிவ கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக திகழ்ந்தனர். ஆனால், போதிய ஊதியம் கொடுக்காத மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடுவதை காட்டிலும், கோடிகளை கொட்டிக் கொடுத்த உள்ளூர் விளையாட்டு தொடர்களில் விளையாடவே அவர்கள் அதிக கவனம் செலுத்தினர். அதேநேரம், முக்கிய ஐசிசி தொடர்களில் மட்டும் தேசிய அணிக்காக விளையாட முற்பட்டபோது, அந்த நாட்டு கிரிக்கெட் சம்மேளனம் அதை ஏற்க மறுத்தது. பல நட்சத்திர வீரர்களும் தேசிய அணியில் டிருந்து நிராகரிக்கப்பட்டனர். இதனால், மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணி சரிவை நோக்கி பயணித்தது.
டி-20யிலும் பாதாளத்திற்கு சென்ற மே.தீ. அணி:
2021ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பையில் 5 லீக் போட்டிகளில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஒரே ஒரு லீக் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதற்கும் மேலாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கு கூட அந்த அணி தகுதி பெறவில்லை.
முடிந்ததா மேற்கிந்தியா தீவுகளின் கிரிக்கெட்?
இந்நிலையில் தான் கடந்த 2019ம் ஆண்டு புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்த மேற்கிந்திய தீவுகள் அணி, நடப்பாண்டு உலக்கோப்பையில் தகுதிச்சுற்று போட்டியில் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அதில் நேபாள் மற்றும் அமெரிக்கா போன்ற சின்ன அணிகளை வீழ்த்தினாலும், ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், கத்துக்குட்டியான ஸ்காட்லாந்து அணியிடம் தோல்வியுற்று உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பையே மேற்கிந்திய தீவுகள் அணி இழந்துள்ளது.
இதனால், ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை, முதன்முறையாக மேற்கிந்திய தீவுகள் அணி இழந்துள்ளது. கிரிக்கெட் உலகில் அன்று அசைக்க முடியா மன்னனாக திகழ்ந்த அந்த அணி, இன்று கத்துக்குட்டி அணிகளிடம் அடி வாங்கி கவிழ்ந்துள்ளது. அணியை மேம்படுத்த சரியான நேரத்தில் உரிய மாற்றங்களை மேற்கொள்ளப்படாவிட்டால், எத்தகைய வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்பதற்கு மேற்கிந்திய தீவுகள் அணியை காட்டிலும் சிறந்த உதாரணம் வேறு எதுவும் இருக்காது. இதில் இருந்து அந்த அணி மீளுமா? என்பது தான் கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.