வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2 தோல்விகளுடன் தொடரை இழந்த இந்திய அணி, ஆறுதல் வெற்றிபெறும் முனைப்பில் இன்று களமிறங்கியது. முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். வழக்கம்போல் ஷிகர் தவான் ஒற்றை இலக்கை எண்ணுடன் வெளியேற, இஷான் கிஷன் தனக்கே உண்டான பாணியில் அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். 


3வது வீரராக களமிறங்கிய விராட் கோலி ஒரு முனையில் நிதான ஆட்டத்தை வெளிபடுத்த, மறுமுனையில் இஷான் கிஷன் வேகம் மாண்டஸ் புயலை விட அதிவேகமாக இருந்தது. 


தொடக்கம் முதல் நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த இஷான் கிஷன் 49 பந்தில் அரைசதம் அடித்தார்.  அதன் பின்னர் அடித்து ஆடிய இஷான் கிஷன் பங்களாதேஷ் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிட்டார். இஷான் கிஷன் 90 ரன்களில் இருந்த போது சிக்ஸர் அடிக்க முயற்சி செய்த போது கேட்ச் ஆகி தனது விக்கெட்டினை இழந்திருப்பார். ஆனால், கொடுத்த கடினமான கேட்ச்சை தவறவிடவே கண்டத்தில் இருந்து தப்பி, சதம் விளாசியுள்ளார்.  சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தினை இஷான் கிஷன் பதிவு செய்தார். 


இஷான் கிஷன் இரட்டை சதம்: 






ருத்ரதாண்டவமாடிய இஷான் கிஷன் 126 பந்தில் இரட்டைச் சதம் விளாசி அதகளப்படுத்தியுள்ளார். மேலும் இந்த இரட்டைச் சதத்தின் மூலம் இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான தோனி மற்றும் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். மேலும், இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான சச்சின், சேவாக் ஆகியோரது சாதனையை சமன் செய்துள்ளார். சர்வதேச அரங்கில் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் எனும் சாதனையையும் அவர் படைத்துள்ளார். 


மேலும் குறைந்த பந்தில் இரட்டைச் சதம் விளாசிய வீரர் எனும் உலக சாதனையையும் படைத்தார்.அதிரடியாக ஆடிவந்த இஷான் கிஷன் 131 பந்தில், 210 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.


விராட் கோலி சதம்: 






85 பந்துகளில் 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உதவியுடன் 103 ரன்கள் விளாசி, 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி தனது 44வது சதத்தை பதிவு செய்தார். ஒட்டுமொத்தமாக இது இவருக்கு 72வது சதமாகும். 91 பந்துகளில் 113 ரன்கள் குவித்த விராட் கோலி, ஷகிப் வீசிய 42வது ஓவரில் 113 ரன்கள் அடித்து மெகிடி ஹாசனிடம் கேட்சானார்.


அடுத்து வந்த பின்வரிசை வீரர்களான ஷ்ரேயஸ் ஐயர் 3 ரன்களும், கேஎல் ராகுல் 8 ரன்களும், தாக்கூர், 3 ரன்களும் எடுத்து வெளியேறினர். ஓரளவு தாக்குபிடித்து ஆடிய வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களும், அக்சார் பட்டேல் 20 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். 


தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்கள் எடுத்து, 410 ரன்கள் வங்கதேச அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. இதன்மூலம் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டியில் 6வது முறையாக 400 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளது.