ராஞ்சியில் உள்ள JSCA இன்டர்நேஷனல் ஸ்டேடியம் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
மீண்டும் சொதப்பிய அர்ஷ்தீப்
நேற்றைய போட்டி இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கு கடினமான இரவாக அமைந்தது. அவர் வீசிய நான்கு ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்தது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 2022 டி 20 உலகக் கோப்பையில் இந்தியாவின் சிறந்த வீரராக இருந்த அர்ஷ்தீப், அதற்குப் பிறகு தனது ஃபார்மை திரும்பப் பெற போராடி வருகிறார்.
ஹர்திக்கிற்கு ஓவர் இருந்த போதிலும், இன்னிங்ஸின் இறுதி ஓவரை வீச அர்ஷ்தீப் மீது ஹர்திக் நம்பிக்கை வைத்தார். ஆனால் அந்த முடிவு இந்தியாவுக்கு சாதகமாக அமையவில்லை. அந்த ஓவரில் 27 ரன்கள் கொடுத்ததற்காக அரஷ்தீப் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். அது கடைசி ஓவர் என்பதால் ஆட்டத்தின் போக்கும் நியூசிலாந்து பக்கம் திரும்ப தோல்விக்கு முக்கிய காரணமாக அது அமைந்தது என்ற பேச்சு பரவலாக எழுந்து வருகிறது.
கடைசி ஓவரில் 27 ரன்கள்
முதல் பந்து நோ-பாலாக மாற, எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல, டேரில் மித்செல் அதை சிக்ஸருக்கு விளாசினார். அடுத்ததாக ஃப்ரீ ஹிட் பந்து அதுவும் சிக்ஸருக்கு போக ஒரே பந்தில் 13 ரன்கள் கொடுத்து ஓவரை துவங்கினார் அரஷ்தீப். அந்த ஓவரின் இரண்டாவது பந்து அதாவது வீசப்பட்ட மூன்றாவது பந்தில் இன்னொரு சிக்ஸர் அடிக்க ஆட்டம் பரபரத்தது. பின்னர் மிட்செல் அடுத்த பந்தில் ஒரு பவுண்டரி அடிக்க இது இன்னும் முடியவில்லையா என்ற எண்ணம் ஹர்திக் போலவே எல்லோருக்கும் தோன்றியது. ஆனால் அதன்பிறகு கம்பேக் கொடுத்த அரஷ்தீப் எப்படியோ கடைசி மூன்று பந்துகளில் 4 ரன்களை மட்டும் கொடுத்து மீண்டார். ஆனால் முதல் மூன்று பந்துகளிலேயே 23 ரன்கள் சென்றுவிட்ட அந்த ஓவர் ஏற்கனவே பெரிய ஓவர்தான். அந்த ஓவரில் 27 ரன்கள் குவிக்க ஆட்டம் நியூசி. பக்கம் திரும்பியது.
கடைசி ஓவரில் அதிக ரன் கொடுத்த இந்திய வீரர்
இந்த 27 ரன்கள் மூலம் கடைசி ஓவரில் அதிக ரன் கொடுத்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனை புத்தகத்தில் அர்ஷ்தீப் பெயர் பதிந்துள்ளது. இதற்கு முன் 2012 இல் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை வீசிய சுரேஷ் ரெய்னா 26 ரன்கள் கொடுத்ததே மோசமான சாதனையாக இருந்தது. தற்போது அதனை 23 வயதான அர்ஷிதீப் முறியடித்து இருப்பதால், ரசிகர்கள் கோபம் கொண்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே முன்னர் ஒரு போட்டியில் தொடர்ச்சியாக நோ-பால் வீசியதற்காக கடுமையான ட்ரோலுக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், இடது கை வேகப்பந்து வீச்சாளர் 18 வது ஓவரில் டெவன் கான்வேயின் முக்கியமான விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடைசி ஓவரில் அவர் செய்த நல்ல விஷயமும் மறைந்து போனது. ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செல் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே ஆகியோர் சிறப்பான அரை சதங்களை அடித்து, முதல் T20I போட்டியில் 176/6 என்ற நிலைக்குத் கொண்டு சென்றனர்.
இந்திய அணி தோல்வி
கான்வே 35 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 52 ரன்கள் எடுத்தார். மேலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நன்றாக ஆடினார். மறுபுறம், டெரில் மிட்செல் இன்னிங்ஸின் பிற்பகுதியில் வந்து 30 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் இணைந்து 56 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர், அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் 119 ரன்களை விட்டுக்கொடுத்து சோதப்பினர்.
இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்ப, சரசரவென 3 விக்கெட்டுகள் விழுந்து இந்தியா தடுமாறியது பெரும் பின்னடைவாக அமைந்தது. பின்னர் நிதானமாக தொடங்கிய சூர்யகுமார் யாதவும், ஹர்திக் பாண்டியாவும் ஓரளவுக்கு சரிவில் இருந்து மீட்டனர். ஆனால் நன்றாக ஆடிவந்த சூர்யகுமார் யாதவ் 47 ரண்களில் இருக்கும்போது அவசர பட்டு ஒரு பந்தை தூக்கிவிட அது கேட்ச் ஆகி மீண்டும் சரிவு துவங்கியது. அவரை தொடர்ந்து கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் ஆட்டம் இழக்க, வாஷிங்டன் சுந்தர் மட்டும் நிலைத்து ஆடி அரைசதம் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரண்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.