தஞ்சாவூர்: மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச அளவில் ஆக்ராவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் பங்கேற்று ஊருக்கு திரும்பிய தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்த பாலசுந்தருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த போட்டியில் நேபாள் அணியை இந்திய அணி வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 


வேர்கள் என்ற ஒன்று தான் வளரும் செடிக்கு ஆதாரம். தன்னம்பிக்கை என்ற ஒன்று தான் நம் வாழ்க்கையின் உயர்வுக்கு மூலாதாரம். நடக்கும் பாதைகளை முதலில் சீராக்கி விட்டால் போதும் அதன் பின் சாதனை என்ற ஒன்று மிகவும் சாத்தியமானதே. இதை அறிந்து நாம் நடை போடும் பாதையை தீர்மானித்தாலே போதுமானது.


வெற்றி என்ற இலக்கை மனதில் நிலை நிறுத்தி ஓடும்போது தோல்வியினால் தடுக்கி விழுந்தாலும் நம்பிக்கை என்ற கரங்கள் நம்மை மேலேற்றும் அப்போது நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. காணும் கனவுகளை நனவாக்க நமது எண்ணங்கள் எப்போதும் இலக்கை நோக்கியே இருக்க வேண்டும்.


நிமிடத்திற்கு நிமிடம் மாறும் நம் எண்ணங்களை கலைத்துவிட சில நொடிகளே போதும். ஆனால் நினைத்ததை அடைய பிடிவாதமாக இருந்தால்தான் வெற்றியும் உறுதியாகும். இலக்கை நோக்கி செல்லும் பயணமும் சிறப்பாகும். முயற்சிகள் இருந்து அதில் ஆசைகள் இல்லை என்றால் அந்த முயற்சி வீண். அதேபோல் ஆசைகள் இருந்து முயற்சி இல்லை என்றால் அந்த ஆசை வீண். எனவே ஆசையும், முயற்சியும் வெற்றியை நோக்கி நம்மை தள்ளும் உந்து சக்திகள் என்பது ஐயமில்லை.




மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்து நம்மை தாழ்த்திக் கொள்ளக்கூடாது. உங்களை உங்கள் கடந்த காலத்தை வைத்து மட்டுமே ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அங்கு ஏற்பட்ட தடைகளை எப்படி வெற்றிகளாக மாற்றினோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தோல்விகள் என்ற இருட்டு நம்மை தொடர்ந்து துரத்தும் பொழுது முயற்சி என்ற விளக்குடன் ஓட ஆரம்பித்தால் வெற்றி நம்மை நோக்கி வேகமாக வரும்.


அந்த வகையில் தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்தவர் பாலச்சுந்தர் (27). சிவில் பி.இ. முடித்துள்ளார். மாற்றுத்திறனாளி ஆன இவருக்கு பிறந்தது முதல் இடதுகை பாதிப்பு இருந்துள்ளது. இவரது தந்தை பழனி கூலித்தொழிலாளி. காலமாகி விட்டார் இவரது தாய் விஜயா தொடக்கப்பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.


மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தன்னிடம் இருக்கும் குறையை பொருட்படுத்தாத பாலச்சுந்தருக்கு இளம் வயதிலேயே கிரிக்கெட் மீது தணியாத தாகம். ஏன் அதுதான் தன் வாழ்க்கை என்றே நினைத்துள்ளார். இதனால் தீவிரமாக பயிற்சிகள் மேற்கொண்ட பாலச்சுந்தர் உள்ளூர் அளவில் நடந்த பல போட்டிகளில் வெற்றி பெற்று தனது திறமையை வளர்த்துக் கொண்டார். இவரது கிரிக்கெட் பயிற்சிக்கு உறுதுணையாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் செயல்பட்டனர்.


தன் திறமைகளை வளர்த்துக்கொண்ட பாலச்சுந்தர் கடந்த 2022ம் ஆண்டு காங்கேயத்தில் நடந்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி தேர்வில் விளையாடினார். இதில் 30 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து தேர்வு பெற்றார். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.


சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் பெற்று தன்னை நிரூபித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற பாலசுந்தர் ஆக்ராவில் தேசிய அளவில் நடந்த இந்தியா- நேபாள் மாற்று திறனாளிகளுக்கான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார். முதல் முறையாக இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்காக தமிழகத்தில் இருந்து தேர்வு பெற்ற ஒரே ஒருவர் என்ற பெருமையும் பாலசுந்தரை சேர்ந்தது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி நேபாள் அணியை அபாரமாக வெற்றிக் கொண்டது. இதையடுத்து ஊருக்கு திரும்பிய பாலசுந்தரை கிராம மக்கள் மாலை அணிவித்து ஆரவாரமாக வரவேற்றனர்.