மேஜர் லீக் கிரிக்கெட் என்ற கிரிக்கெட் தொடர் தற்போது அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்றுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும்  சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியின்  உரிமையாளர்கள் தான் இந்த தொடரில் விளையாடி வரும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் எம்.ஐ நியூயார்க் அணிகளுக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர். இந்த தொடர் கடந்த ஜூலை 12 ஆம் தேதி தொடங்கியது. 


இதில் நேற்று நடந்த 7வது லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி எம்.ஐ நியூயார்க் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்ய முன்வந்த  டெக்சாஸ் சூப்பர் கிங்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வே,  டு பிளெஸ்ஸிஸ் களமிறங்கினர். ஐபிஎல் போட்டிகளில் பந்துவீச்சாளர்களின் பந்தை நாலாபுறமும் சிதறடித்த  டு பிளெஸ்ஸிஸ், இன்றும் துவம்சம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காகிசோ ரபாடா வீசிய பந்தில் கிளீன் போல்ட் ஆனார். பின்னர் வந்த கோடி செட்டி(12), டேவிட் மில்லர்(17) சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். ஆனால் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே நிதானமாக ஆடி ரன்களை அணிக்காக சேர்த்துக்கொண்டிருந்தார்.



அதிரடியாக ஆடிய கான்வே


டெவோன் கான்வேக்கு பக்கபலமாக களத்தில் மிட்செல் சான்ட்னர் சற்று நேரம் தாக்குபிடித்தார். நிதானமாக ஆடி வந்த கான்வே பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எம்.ஐ. பந்துவீச்சாளர்களால் கான்வேயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அபாரமாக ஆடிய கான்வே 55 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் 8 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்திருந்தது.


ஆரம்பமே ஆட்டம் கண்ட எம் ஐ


155 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய எம்.ஐ. அணியின் தொடக்க ஆட்டக்காரர் சயான் ஜஹாங்கீர், மோனாங்க் படேல் ஆரம்பமே அதிர்ச்சி அளித்தனர். இரண்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட மோனாங்க் படேல் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்தவர்களும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ளமுடியாமல் அடுத்தடுத்து நடையை கட்டினர்.  தொடக்க ஆட்டக்காரர் சயான் ஜஹாங்கீர் மட்டும் நிதானமாக ஆடி அணிக்கு ரன்களை சேர்த்துகொண்டிருந்தார்.




வெற்றியை தன் வசம் ஆகியது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்


சிறப்பான பந்துவீச்சாள் எம்.ஐ.நியூயார்க் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் போட்டியை தன்வசம் ஆகியது. டேனியல் சாம்ஸ் 4 ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட்டுகளுடன் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை உறுதி செய்தது. 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 137 ரன்களை மட்டுமே எடுத்தது எம்.ஐ.நியூயார்க் . இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ். இந்த வெற்றியின் மூலம் சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.