IPL 2024 Released Players: ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு 10 அணி நிர்வாகங்களால் வெளியேற்றப்பட்டுள்ள, நட்சத்திர வீரர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் 2024 சீசன்:
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி தக்கவைத்துக் கொள்ளும் மற்றும் விடுவித்துக் கொள்ளும் வீரர்களின் விவரங்களை வழங்குமாறு, 10 அணி நிர்வாகங்களையும் ஐபிஎல் அமைப்பு கேட்டுக்கொண்டது. அதன்படி, அந்த பட்டியலை வழங்குவதற்கான அவகாசம் நேற்று மாலை முடிவுற்றது. 10 அணிகளும் தங்களுக்கான வீரர்களின் விவரங்களையும் வெளியிட்டது. அதில், யாரும் எதிர்பாராத விதமாக, கடந்த ஆண்டு ஏலத்தின் போது முட்டி மோதி பல கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட நட்சத்திர வீரர்களும், பல ஆண்டுகளாக அணியின் வெற்றிக்கு பங்களித்த முக்கிய வீரர்களையும் சில அணி நிர்வாகங்கள் வெளியேற்றியுள்ளன. அந்த வகையில், அணி நிர்வாகங்களால் வெளியேற்றப்பட்டு, ஏலத்திற்கு வரவிருக்கும் நட்சத்திர வீரர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனும், உலகத்தரம் வாய்ந்த ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடி ரூபாய்க்கு கடந்த சீசனுக்காக ஏலத்தில் எடுத்தது. ஆனால், காயம் காரணமாக அவர் பெரும்பாலான போட்டிகளில் களமிறங்கவே இல்லை. இந்நிலையில், பணிச்சுமை காரணமாக அடுத்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக கூறியதால், பென் ஸ்டோக்ஸை சென்னை அணி நிர்வாகம் விடுவித்துள்ளது.
டெல்லி கேபிடல்ஸ்
டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து 11 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதில் கடந்த சீசனில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் விளையாடாதா, மனீஷ் பாண்டே, சர்ஃபராஸ் கான், கமலேஷ் நாகர்கோடி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
பஞ்சாப் கிங்ஸ்
அதிரடி ஆட்டத்திற்கு பெயர்போன தமிழக வீரரான ஷாருக்கான் கடந்த ஏலத்தில் 9 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதற்கு நியாயம் செய்யும் வகையில், பஞ்சாப் அணி வெற்றி பெற்ற போட்டிகளில் அவர் சிறப்பான பங்களிப்பை வழங்கினார். இருந்தும் தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
ஆல்-ரவுண்டரான ஷ்ரதுல் தாக்கூரை கடந்த சீசனுக்காக கொல்கத்தா அணி 10 கோடியே 75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. பெங்களூர் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி அந்த போட்டியில் தனிநபராக வெற்றியை தேடி தந்தார். இந்நிலையில் அவரை கொல்கத்தா அணி வெளியேற்றியுள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:
இங்கிலாந்தைச் சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் ஆன ஹாரி ப்ரூக்கை ஏலத்தில் எடுக்க கடந்த ஆண்டு கடும் போட்டி நிலவியது. ஏலத்தின் முடிவில் 13.25 கோடி ரூபாய் கொடுத்த ஐதராபாத் அணி வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் அந்த அணி வாங்கிய விலையுயர்ந்த வீரர் என்ற பெருமையை ப்ரூக் பெற்றார். ஆனால் எதிர்பார்த்த செயல்பாட்டை அவர் வெளிப்படுத்தாததால் அணி நிர்வாகம் ப்ரூக்கை விடுவித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ்:
கடந்த ஆண்டு ஏலத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய வேகப்பந்து வீச்சாளர்களில் ஜோப்ரா ஆர்ச்சரும் ஒருவர். இவரை ஏலத்தில் எடுக்க பல அணிகள் திவிரம் காட்டின. இறுதியில் மும்பை அணி 8 கோடி ரூபாய்க்கு ஆர்ச்சரை ஏலத்தில் எடுத்தது. ஆனால், தொடர்ச்சியான காயங்களால் அவர் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறியதோடு, விளையாடிய போட்டிகளிலும் ரன்களை வார் வழங்கினர். இதனால், மும்பை அணி அவரை தற்போது ஒப்பந்தத்தில் இருந்து விடுவித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
நட்சத்திர வீரர்களை விடுவித்ததில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பது பெங்களூர் அணியின் முடிவு தான். கடந்த ஏலத்தின் போது ரூ.10.75 கோடி செலவில் எடுக்கப்பட்ட ஷர்ஷல் படேல் மற்றும் ரூ.7.75 கோடி செலவில் எடுக்கப்பட்ட ஹேசல்வுட் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களையும் விடுவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் சம்மேளனத்தை ஐசிசி இடைநீக்கம் செய்து இருப்பதால், அந்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ஹசரங்காவையும் அந்த அணி நிர்வாகம் விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.