இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. தென்னாப்பிரிக்காவில் தற்போது ஒமிக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்தத் தொடருக்கு மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
முதல் டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு சூப்பர் ஸ்போர்ட் பார்க், சென்ட்ஜூரியன் மைதானத்தில் தொடங்குகிறது. ஏற்கனவே, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
விராட் கோலி (கேப்டன்),கே எல் ராகுல் (துணை கேப்டன்),மயங்க் அகர்வால்,புஜாரா,ரஹானே,ஸ்ரேயாஸ் ஐயர், ஹணுமா விஹாரி,ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஹா, அஷ்வின்,ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, ஷர்துல் தாக்கூர், சிராஜ்
ரோஹித் சர்மா காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக பிரியாங் பஞ்சல் அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்தநிலையில், டெஸ்ட் தொடரை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் காயத்தில் இருந்து மீண்ட ரோஹித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பி கேப்டனாக செயல்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி கொண்டிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் ஒருநாள் அணிக்கு இடம்பெறலாம். அதேபோல், விஜய் ஹசாரே தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய சகாலுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம்.
தொடர்ந்து, ஐபிஎல் தொடர் மற்றும் விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் ஒருநாள் தொடரில் முக்கிய அங்கம் வகிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. காயம் காரணமாக ஆல் - ரவுண்டர்களான ஜடேஜா, ஹர்திக் பாண்டியா இடம் பெற வாய்ப்பில்லை. மேலும், நீண்ட நாட்களாக ரன் எடுக்க திணறி வரும் ஷிகர் தவான் இந்த தொடரிலும் ஓரங்கட்ட படலாம் என்று தெரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்