புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பின் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் டி20 தொடரை இந்திய அணி வென்றாலும் ஒரு நாள் போட்டியில் ஒயிட்வாஷ் முறையில் தொடரை இழந்தது. இதனைதொடர்ந்து நாடு திரும்பிய இந்திய அணி தற்போது ஓய்வு எடுத்து வருகிறது.
இந்தியா - வங்கதேசம்:
பின்னர் சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. அதன்படி இந்த தொடரின் முதல் போட்டி வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்தியா - வங்கதேசம் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் செப்டம்பர் 27-ம் தேதி தொடங்குகிறது. அதேபோல் மூன்று டி20 போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது. அக்டோபர் 6, 9 மற்றும் 12 ஆம் தேதிகளில் இந்த போட்டிகளில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடுகின்றன.
இந்தியா - நியூசிலாந்து:
டி20 தொடரைத்தொடர்ந்து நியூசிலாந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இந்தியா நியூசிலாந்தை இரண்டு டெஸ்டில் எதிர்கொள்கிறது, முதல் டெஸ்ட் அக்டோபர் 16 ஆம் தேதி பெங்களூருவிலும், இரண்டாவது டெஸ்ட் புனேவில் நவம்பர் 1 ஆம் தேதியும் தொடங்குகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து, இந்தியாவின் வெளிநாட்டுப் பயணம் தொடங்கவுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா:
அதாவது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளன. இந்த தொடர் நவம்பர் 8 ஆம் தேதி தொடங்கும், இரண்டாவது போட்டி நவம்பர் 13 ஆம் தேதி தொடங்குகிறது. மூன்றாவது போட்டி நவம்பர் 15 மற்றும் நான்காவது போட்டி 17 ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன.
பார்டர்-கவாஸ்கர் டிராபி:
இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து, பிரபலமான பார்டர்-கவாஸ்கர் டிராபி, ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. டெஸ்ட் தொடர் நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்டிலும், மூன்றாவது டெஸ்ட் டிசம்பர் 14 ஆம் தேதி பிரிஸ்பேனிலும், நான்காவது டெஸ்ட் டிசம்பர் 26 ஆம் தேதி மெல்போர்னிலும் நடைபெறும். கடைசி டெஸ்ட் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான தொடர் ஜனவரி 3-ம் தேதி சிட்னியில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியா, சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுகிறது.
இந்த தொடரில் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கும். T20I போட்டிகள் ஜனவரி 22 ஆம் தேதி சென்னையில், ஜனவரி 25 ஆம் தேதி கொல்கத்தாவில் மற்றும் ஜனவரி 28 ஆம் தேதி ராஜ்கோட்டிலும், மீதமுள்ள இரண்டு போட்டிகள் ஜனவரி 31 ஆம் தேதி புனேவிலும், பிப்ரவரி 2 ஆம் தேதி மும்பையிலும் நடைபெற உள்ளன. ஒருநாள் போட்டிகள் நாக்பூரில் பிப்ரவரி 6ஆம் தேதியும், கட்டாக்கில் பிப்ரவரி 9ஆம் தேதியும், அகமதாபாத்தில் பிப்ரவரி 12ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. ஐபிஎல் சீசன் 18க்கு முன்னதாக இந்தியா விளையாட உள்ள போட்டிகள் இது என்பது குறிப்பிடத்தக்கது.