பும்ரா, பண்ட் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயரும் இந்திய கிரிக்கெட் அணிக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரேயாஸ் அய்யருக்கு அறுவை சிகிச்சை:
முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் அணியின் நடுகள வீரரான ஷ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார். ஆனால், நான்காவது போட்டியின் போது மீண்டும் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, போட்டியில் இருந்து பாதியிலேயே விலகினார். அதைதொடர்ந்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்தும் விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு முதுகுப்பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 5 மாதங்களுக்கு ஓய்வு?
இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி, ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகுப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும், இதன் காரணமாக அடுத்த 4 முதல் 5 மாதங்களுக்கு அவரால் கிரிக்கெட் விளையாட முடியாது எனவும் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த தகவல் உறுதியானால், ஏற்கனவே பும்ரா மற்றும் பண்ட் ஆகியோர் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஷ்ரேயாஸ் ஐயரும் இல்லாதது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி:
இங்கிலந்தின் ஓவல் மைதானத்தில் வரும் ஜுன் மாதம் 7ம் தேதி நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோத உள்ளன. இந்நிலையில், டெஸ்ட் அணியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான பும்ரா, பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஆகியோர் ஒரே நேரத்தில், காயமடைந்து இருப்பது இந்திய அணியை மேலும் வலுவடைய செய்துள்ளது. ஏற்கனவே, கடந்த முறை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்தது. இந்நிலையில், பண்ட், பும்ரா மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் இல்லாமல் இந்த முறை இறுதிப்போட்டியில் களமிறங்க உள்ளது, முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றும் கனவை கேள்விக்குறியாக்கியுள்ளது.
உலகக்கோப்பையில் ஸ்ரேயாஸ்?
அதேநேரம், 4 முதல் 5 மாத ஓய்விற்கு பிறகு, நடப்பாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள உலககோப்பை தொடருக்கு, ஸ்ரேயாஸ் அய்யர் தயார் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அறுவை சிகிச்சை காரணமாக, இந்த மாத இறுதியில் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரிலும் ஷ்ரேயாஸ் அய்யர் பங்கேற்க மாட்டார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஆண்ட்ரூ ரசல் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிற்து.