இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்ற கேள்விக்கு இன்னும் முழுமையான பதில் தெரியவில்லை. நேற்று நடந்த இண்டர்வியூவில் கௌதம் கம்பீர் மற்றும் WV ராமன் பெயர்கள் அதிகளவில் அடிப்பட்டு வருகின்றன. இருப்பினும், ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்ததும், இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளனர். 


இந்தநிலையில், இந்திய அணிக்கு யார் தலைமை பயிற்சியாளராக வந்தாலும், அவர்கள் சந்திக்க இருக்கும் 5 பெரிய சவால்களை பற்றி இங்கே பார்ப்போம். 


ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: 


இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலான ஒன்று. ஏனெனில், ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியா போன்ற ஜாம்பவான் அணியை டெஸ்டில் அடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. எனவே, தலைமை பயிற்சியாளராக யார் வந்தாலும், ஆஸ்திரேலியாவில் நடக்கும் இந்த டெஸ்ட் தொடர் பெரும் சவாலாக இருக்கும். 


ஐசிசி கோப்பையை வெல்லுமா இந்தியா..? 


கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்று, கோப்பையை தவற விட்டது. இதன்மூலம், கடந்த 11 ஆண்டுகளில் இந்திய அணி ஒருமுறை கூட ஐசிசி கோப்பையை வென்றதில்லை. இருப்பினும், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில், தலைமை பயிற்சியாளராக புதிதாக களமிறங்கும் நபர், தமது பயிற்சியின்கீழ், இந்திய அணிக்காக ஏதேனும் ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்புவர்.


புதிய கேப்டனை தயார் செய்தல்: 


இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இது கடைசி காலக்கட்டம் என்றே சொல்லலாம். இவரும் இன்னும் சிறிது காலத்தில் ஓய்வை அறிவிக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ரோஹித் சர்மாவுக்கு பதிலாக யார் அடுத்த இந்திய கேப்டனாக வருவார்கள் என்பதை இப்போதிலிருந்தே அலச வேண்டும். எனவே, புதிய கேப்டனை எப்படி தயார் செய்வது என்பதுதான் புதிய தலைமை பயிற்சியாளரின் தலையாய கடமையாக இருக்கும். 


அனுபவ வீரர்கள் கையாள வேண்டும்..? 


ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு ஏற்றபடியும், அவர்களுக்கு ஏற்றாற்போல் நடந்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில், அனுபவ வீரர்களுக்கு எந்தவித மனகசப்பும் ஏற்பட்டு விடாமல் எத்தனை போட்டிகளில் விளையாடுகிறார்கள், எத்தனை போட்டிகளில் விளையாட மாட்டார்கள், இதையெல்லாம் தவிர்த்து, அந்த வீரர்களுடன் எப்படி உறவைப் பேணுகிறார்கள் என்பதுதான் முக்கியம். 


இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு: 


தற்போது எந்த ஒரு புதிய வீரரும் இந்திய அணியில் இடம் பெறுவது கடினம். ஒவ்வொரு இடத்திற்கும் இரண்டு அல்லது மூன்று வீரர்கள் ஏற்கனவே அணியில் உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது, இந்திய அணிக்கு அழைப்பது போன்ற செயல்களை திறம்பட செயல்படுத்துவது வேண்டும். அனுபவ வீரர்களுக்கும் வாய்ப்பு அளிப்பதோடு, இளம் வீரர்களும் இந்திய அணியில் இடம் அளிப்பது அவசியம். இதை புதிதாக பதவியேற்கும் தலைமை பயிற்சியாளர் எப்படி கையாள்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.