ரஞ்சி டிராபி 2023-24க்கான போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி ஆட்டத்தில் மும்பை மற்றும் தமிழ்நாடு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 146 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. 


இதையடுத்து, முதல் இன்னிங்ஸை ஆடிய மும்பை அணி 378 ரன்கள் குவித்தது. மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், மும்பை அணி 70 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றிபெற்று ரஞ்சி டிராபி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 


இந்த போட்டியில் தமிழ்நாடு அணிக்கு ஒரே ஆறுதல் தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோரின் அசத்தல் பந்துவீச்சு மட்டுமே. மும்பை அணிக்கு எதிராக பந்துவீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் சாய் கிஷோர் நடப்பு ரஞ்சி டிராபியில் 50 விக்கெட்களை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். 









நடப்பு ரஞ்சி டிராபியில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சாய் கிஷோர் 6 முறை 4 விக்கெட்டுகளையும், 3 முறை 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதையடுத்து, 53 விக்கெட்டுகளை கைப்பற்றி நடப்பு ரஞ்சி டிராபியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பௌலராக உள்ளார். 


3வது தமிழ்நாடு பந்துவீச்சாளர்: 


ரஞ்சி டிராபியில் ஒரு சீசனில் 50 விக்கெட்களை கடந்த தமிழ்நாடு அணியை சேர்ந்த மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். சாய் கிஷோருக்கு முன், கடந்த 1972-73 ரஞ்சி டிராபியில் எஸ்.வெங்கடராகவன் 58 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அதேபோல், 1999-2000ல் நடைபெற்ற ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணிக்காக விளையாடிய ஆஷிஷ் கபூர் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 






யார் இந்த சாய் கிஷோர்..? ஒரு குட்டி ரீ-கால்:


கடந்த 2023ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணியில் சாய் கிஷோர் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. சாய் கிஷோர் தனது அறிமுகப் போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி தனது பெயரில் ஒரு சிறப்பு சாதனையையும், சர்வதேச டி20யில் அறிமுகமான முதல் போட்டியில் மூன்று கேட்ச்களை பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சாய் கிஷோர் பெற்றார்.இதையடுத்து, விரைவில் இந்திய டெஸ்ட் அணியிலும் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.