மகளிர் பிரீமியர் லீக் 2024ம் 11வது போட்டியில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் உபி வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.


பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும், எலிஸ் பெர்ரியும் எந்த பக்கம் பார்த்தாலும் பவுண்டரிகளும் சிக்ஸர்களாக அடித்து ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.


கேப்டன் ஸ்மிருதி மந்தனா 50 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் எடுக்க, அதே நேரத்தில் எலிஸ் பெர்ரி 37 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 58 ரன்களை எடுத்தார். 


கார் கண்ணாடியை உடைத்த எலிஸ் பெர்ரி: 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக எலிஸ் பெர்ரி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது 19வது ஓவரை உபி வாரியர்ஸ் அணியை சேர்ந்த தீப்தி சர்மா வீசினார், இந்த ஓவரின் ஐந்தாவது பந்தை எலிஸ் பெர்ரி எதிர்கொண்டு தூக்கி அடித்தார். அந்த பந்தானது மிட் விக்கெட்டை நோக்கி வேகமாக பறந்து, பார்வையாளர் அரங்கிற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியில் சென்று தாக்கியது. 


காரில் பட்ட வேகத்தில் காரின் கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது. இதை பார்த்த ஆர்சிபி ரசிகர்களும், கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். அதேநேரத்தில், எலிஸ் பெர்ரியின் இந்த இமாலய சிக்ஸரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 






போட்டி சுருக்கம்:


உபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணி சார்பில் கேப்டன் மந்தனா 80 ரன்களும், எலிஸ் பெர்ரி 58 ரன்களும் எடுத்திருந்தனர். எலிஸ் பெர்ரி இரண்டாவது விக்கெட்டுக்கு மந்தனாவுடன் 95 ரன்களும், மூன்றாவது விக்கெட்டுக்கு ரிச்சா கோஷூடன் 42 ரன்களும் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 


உபி வாரியர்ஸ் அணி சார்பில் அஞ்சலி சர்வானி, தீப்தி சர்மா மற்றும் எக்லெஸ்டோன் தலா ஒரு விக்கெட்டை எடுத்திருந்தனர். 199 என்ற இமாலய இலக்கை துரத்திய உபி வாரியர்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. கேப்டன் அலிசா ஹீலி (55), கிரண் நவ்கிரே (18)  என முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்ந்தனர். இதன்பிறகு மறுமுனையில் இருந்து கேப்டன் ஹீலிக்கு பார்ட்னர்ஷிப் அமையாததால் தனி ஒரு ஆளாக போராடினார். அடுத்தடுத்து உள்ளே வந்த சாமரி அதபத்து (8), கிரேஸ் ஹாரிஸ் (5). ஸ்வேதா செஹ்ராவத் (1)  என யாருமே இரட்டை இலக்கை தொடவில்லை. இதையடுத்து துணை கேப்டன் தீப்தி சர்மா (33), பூனம் கெம்னார் (31) என ஓரளவு ரன் சேர்க்க, ஆறாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 41 ரன்கள் சேர்ந்தது. 18வது ஓவரில் தீப்தி அவுட்டாக, அணி மீண்டும் தத்தளித்தது. இதையடுத்து, 20 ஓவர்கள் முடிவில் உபி வாரியர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.