உலககோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதுகிறது. குரூப் 2 பிரிவில் இந்திய அணி எந்த வெற்றியையும் தொடங்காமல் 5வது இடத்தில் உள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனால், இந்திய அணிக்கு இந்த போட்டி வாழ்வா? சாவா? ஆட்டம் ஆகும்.


பாகிஸ்தான், நியூசிலாந்து என்று வரிசையாக தோல்வியை சந்தித்துள்ள இந்திய அணிக்கு இந்த போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடி மட்டுமின்றி, பிரம்மாண்ட வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடனும் களமிறங்குகிறது. ஆனால், ஆப்கானிஸ்தான் அணி பயிற்சி போட்டியிலே மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய உற்சாத்துடன் களமிறங்கியது. அதே உற்சாகத்துடன் ஸ்காட்லாந்து, நமீபியாவை துவம்சம் செய்ததுடன், பாகிஸ்தான் அணிக்கும் கடைசி வரை நெருக்கடி அளித்தது.




ஆப்கான் அணிக்கு முகமது ஷாசாத், ஹஜ்ரதுல்லா ஷாசாய் தொடக்க கூட்டணி அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. நஜிபுல்லா ஜட்ரான், குர்பாஸ், முகமது நபி ஆகியோரும் மிகப்பெரிய பக்கபலமாக உள்ளனர். இவர்கள் அனைவரும் அதிரடியாக ஆடினால் நிச்சயம் ஆப்கானிஸ்தான் மிகப்பெரிய ரன்களை குவிக்கும் என்பது உறுதி.


இந்திய அணியிலும் ரோகித்சர்மா, கே.எல்.ராகுல், இஷான்கிஷான், விராட்கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா என்று  நீண்ட பேட்டிங் வரிசை உள்ளது. ஆனால், இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங் பெரியளவில் எடுபடவில்லை என்பதுதான் கவலைக்குரிய விஷயம். இந்திய அணியில் யாராவது ஒருவர் பார்முக்கு திரும்பினாலும் இந்திய அணி மீண்டும் அசுர பலத்தை எட்டும்.




ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பான பார்மில் உள்ளனர். வேகம், சுழற்பந்து என்று கலவையாக சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். அந்த அணியின் நவீன் உல் ஹக் வேகப்பந்து வீச்சுக்கு தலைமை வகிக்கும் வகையில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவருக்கு ஹமீத் ஹசனும் சிறப்பாக ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் வீசி வருகிறார். சுழற்பந்தில் உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர் ரஷீத்கான் இந்திய பேட்டிங்கிற்கு குடைச்சல் அளிக்க காத்துள்ளார். அவருடன் முஜிப்-உர்-ரஹ்மானும், கரீம் ஜனத், கேப்டன் முகமது நபியும் சிறப்பாக ஒத்துழைத்து வருகின்றனர்.


இந்திய அணியில் பும்ரா, புவனேஷ், ஷமி, ஷர்துல் தாக்கூர் வேகத்தில் சிறந்த பந்துவீச்சாளர்களாக உள்ளனர். ஆனால், இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசியுள்ளார் என்று கூறும் வகையில் யாரும் வீசவில்லை. பாகிஸ்தான், நியூசிலாந்து என்று இரண்டு அணிகளுக்கு எதிராகவும் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா மொத்தமே 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. சுழற்பந்துவீச்சில் ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி இதுவரை பெரியளவில் மாயாஜாலத்தை ஏற்படுத்தவில்லை. பந்துவீச்சாளர்கள் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டால் ஆப்கான் மிகப்பெரிய ஸ்கோரை குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.




இந்திய அணியினருக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக, இந்த போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த இரு முறை தோல்வியை தழுவிய துபாய் மைதானத்தில் இருந்து மாறுபட்டு, அபுதாபி மைதானத்தில் ஆடுவதே இந்திய அணிக்கு உற்சாகத்தை அளிக்கும்.


இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இதுவரை 2 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இரண்டு போட்டிளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி அதிகபட்சமாக ஆப்கானுக்கு எதிராக 159 ரன்களை எடுத்துள்ளது. ஆப்கான் அதிகபட்சமாக 136 ரன்களை எடுத்துள்ளது.  ஆப்கான் அணி குறைந்தபட்சமாக 115 ரன்களை எட்டியுள்ளது. இந்திய அணி ஆப்கான் நிர்ணயித்த 116 ரன்களை எட்டிப்பிடித்ததே இந்தியாவின் குறைந்தபட்ச இலக்கு ஆகும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண