ஆஸ்திரேலியா மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலக கோப்பை ஆட்டத்தில் 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து கோலி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்தியா அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று உலககோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
வெற்றிக்கு பிறகு உணர்ச்சிவசப்பட்டு பேசிய கோலி, "உண்மையை என்னால் நம்பவே முடியவில்லை. சத்தியமாக என்னிடம் வார்த்தைகள் இல்லை. எப்படி நடந்தது என்று தெரியவில்லை. நம்புங்கள், கடைசி வரை இருங்கள் என்று ஹர்திக் என்னிடம் தொடர்ந்து கூறி வந்தார். உண்மையாக சொல்லபோனால் நான் வார்த்தைகளை இழந்துவிட்டேன்.
பெவிலியனில் இருந்து ஷாஹீன் பந்துவீசியபோது, அவரை வீழ்த்த வேண்டும் என்று நான் என்னுடனே பேசி கொண்டேன். நான் ஹரிஸ் ரவூப்பின் பந்தை அடித்தால் அவர்கள் அச்சம் அடைவார்கள். ஏனென்றால், அவர் அவர்களின் பிரதான பந்துவீச்சாளர். அந்த இரண்டு சிக்ஸர்களை அடிக்க நான் ஒருவிதமாக என்னை தயார்படுத்தி கொண்டேன்.
8 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்படத்து. இரண்டு சிக்சர்கள் அடித்த பிறகு அது 16 ஆஃப் 6 ஆக மாறியது. அதனால் நான் வார்த்தைகளை இழந்துவிட்டேன். இன்று வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொஹாலி (2016 டி20 உலகக் கோப்பை) இன்னிங்ஸ்தான் என்னுடைய பெஸ்ட் என்று சொல்லி வந்தேன். அன்று, 52 ரன்களில் 82 ரன்களைப் பெற்றேன்.
இன்று நான் 53 இல் 82 ரன்களைப் பெற்றேன். ஆனால் இன்று, விளையாட்டின் தன்மை மற்றும் நிலைமையை கருத்தில் கொண்டால் இதுதான் என்னுடைய சிறப்பான ஆட்டம் என்று சொல்வேன்" என்றார்.
முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிராக 160 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. நசீம் ஷா வீசிய ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் போல்டு ஆனார். பின்னர், ரோகித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இந்திய அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹரிஸ் ரெளஃப் பந்துவீச்சில் ரிஸ்வானிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து களமிறங்கிய அக்சர் படேல், வந்த வேகத்தில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து ஹார்திக் பாண்டியா களத்திற்கு வந்தார். இதற்கு பின்னர், ஆட்டம் இந்திய அணியின் பக்கம் திரும்பியது. பொறுப்பாக ஆடிய கோலி அரை சதம் பதிவு செய்தார்.
இறுதியாக, 12 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா கடைசி நிமிட பதற்றத்துடன் விளையாடியது. 19வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் பேக் டூ பேக் சிக்ஸர் அடித்து அசத்தினார் கோலி. கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்தை தூக்கி அடித்த பாண்டியா பாபர் ஆஸாமிடம் கேட்ச் ஆனார். இதையடுத்து, தினேஷ் கார்த்திக் களத்தில் இறங்கினார்.
5 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் 1 ரன் எடுத்தார். கடைசி ஓவரின் 3வது பந்தை சிக்ஸருக்கு விளாசினார் கோலி. 3 பந்துகளுக்கு 6 ரன் எடுக்க வேண்டியிருந்தது. ஃப்ரீ ஹிட்டில் போல்டு ஆனார் கோலி. எனினும் அவுட் இல்லை என்பதால் 3 ரன்களை ஓடி எடுத்தனர். 2 பந்துகளுக்கு 2 ரன்கள் தேவை என்று இருந்தது. எதிர்பாராதவிதமாக தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து அஸ்வின் களம் இறங்கினார். கடைசி 2 பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், 5வது பந்து ஒயிட் ஆக அமைந்த நிலையில் கடைசி பந்தில் அஸ்வின் ஒரு ரன் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.