உலகக் கோப்பை டி-20 கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம் ஐ.பி.எல். தொடரில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவரளித்த பதில் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 


20 அணிகள் பங்கேற்கும் 9-வது உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இதில் இந்தியா ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா, முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. ஜூன் 5-ம் தேதி நியூயார்க் நகரில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.


கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.






ரிங்கு சிங், கே.எல். ராகுல், சுப்மன் கில் உள்ளிட்டவர்கள் அணியில் தேர்ந்தெடுக்கப்படாதது உள்ளிட்டவைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதோடு, செய்தியாளர்கள் ரோஹித் ஷர்மாவிடம் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து கேள்வி எழுப்பினர். நடப்பு தொடரில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 147 ஆக மட்டுமே உள்ளது என செய்தியாளர்கள் குறிப்பிட்டு, அவர் உலக்கோப்பை டி-20 தொடரில் நன்றாக விளையாடுவரா என்பது குறித்து கேட்டனர். அதற்கு ரோஹித் ஷர்மா, அஜித் அகர்கர் இருவரும் புன்னகைத்தனர்.






இது தொடர்பாக அஜித் அகர்கர் தெரிவிக்கையில்,”  விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட் குறித்து நாங்கள் பேசியதில்லை. ஐ.பி.எல். போட்டிகளுக்கும் சர்வதேச  கிரிக்கெட் போட்டிக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஐ.பி.எல்.லில் நடக்கும் நேர்மறையாவற்றை எடுத்துகொள்ள வேண்டும். விராட் கோலி ஃபார்ம் பற்றி அதிகம் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை.” என்று தெரிவித்தார்.






விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ரோஹித் ஷர்மா கருத்து தெரிவிக்காமல் புன்னகைத்து பதிலளித்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏனென்றால் இதேபோல 2021-ல் உலகக்கோப்பை டி-20 தொடரில் விராட் கோலியிடம் ரோஹித் ஷர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விராட் கோலி சிரித்துகொண்டே ‘நீங்கள் ரோஹித் ஷர்மாவின் ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்புகிறீர்களா?” என்று பதிலளித்திருந்தார்.



இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இருவருக்கும் இடையே இருக்கும் நட்புறவை பாரட்டி வருகின்றனர்.  இருவருக்குமிடையே இருககும் ஸ்போர்ட்மேன்ஷிப் அழகாக இருப்பதாக பலரும் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பது மிகவும் அழகாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதோடு, விராட் கோலி, ரோஹித் ஷர்மா இருவரும் பதிலளித்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகிறது.


ஸ்பின் பவுலர்களுக்கு எதிராக விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் கேள்வியை எழுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார். அதில்,” விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் தொடர்பான விஷயங்கள் வெகு நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இதை வேதனைக்குரியது. கிர்க்கெட் குறித்து அதிகம் தெரியாதவர்கள் இதை பெரிதாக்கி வருகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார். விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து பேசப்படும் கருத்துகளை கவனித்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை; அவருடைய திறன் குறித்து யாரிடமும் நிரூப்பிக்க வேண்டியதுமில்லை என டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.