டி20 உலகக் கோப்பை:


டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று (ஏப்ரல் 30) அறிவித்தது. இதில் இந்திய அணியின் 15 வீரர்கள் பட்டியலில் ரிங்கு சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை. அவரை மாற்று வீரராக அறிவித்து இருக்கிறது பிசிசிஐ. பிசிசிஐ எடுத்துள்ள இந்த முடிவை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.


இந்த ஐ.பி.எல் லீக்கில் அவுட் ஆப் ஃபார்மில் இருக்கும் ஹர்திக் பாண்டியாவிற்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் ஃபினிஷராக இரண்டு மாதங்கள் முன்பு வரை சர்வதேச போட்டிகளில் நல்ல ஃபார்மில் இருந்த ரிங்கு சிங் நீக்கப்பட்டு இருக்கிறார்.


மாற்று வீரரான ரிங்கு சிங்:


இந்நிலையில் ரிங்கு சிங்கிற்கு அணியில் இடம் கிடைக்காதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்தான் காரணம் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக ஐ.பி.எல் போட்டிகளில் ரிங்கு சிங் விளையாடிவருகிறார். இவர் கடந்த சில வருடங்களாகவே பினிஷராக நல்ல பார்மில் இருக்கிறார்.


ஆறு மற்றும் ஏழாவது இடத்தில் களம் இறங்கும் இவர் இந்த ஐபிஎல் சீசனில் மொத்தம் 9 லீக் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆனால் இவருக்கு மொத்தம் 82 பந்துகளை மட்டுமே சந்தித்து இருக்கிறார். 6 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் விளாசி இருக்கும் இவர் 123 ரன்கள் எடுத்துள்ளார். அந்தவகையில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 150 ஆக இருக்கிறது.


மறுபுறம் ரிங்கு சிங்கிற்கு இணையாக இடது கை பேட்ஸ்மேனாக ஆடி வரும் ஷிவம் துபேவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான்காம் வரிசை அல்லது ஐந்தாம் வரிசையில் பேட்டிங் இறங்க வாய்ப்பு அளித்து வருகிறது. அவர் 9 போட்டிகளில் 203 பந்துகளை சந்தித்து 350 ரன்கள் குவித்துள்ளார்.  இவரது ஸ்ட்ரைக் ரேட் 172 ஆகும். இந்த வித்தியாசம் தான் ரிங்கு சிங்கை நீக்கி விட்டு ஷிவம் துபேவை அணியில் சேர்க்க காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் ரிங்கு சிங்குவை விட அதிக பந்துகளை ஷிவம் துபே சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி ரிங்கு சிங்கிற்கு 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம் கிடைக்காதற்கு ஷிவம் துபே தான் காரணம் என்று பார்க்கப்படுகிறது. 


இந்திய டி20 அணி வீரர்கள்:


ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (WK), சஞ்சு சாம்சன் (WK), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.