டி20 உலகக் கோப்பை 2024ன் அரையிறுதிப் போட்டிகள் நாளை நடைபெறவுள்ளது. இதில் வெற்றிபெறும் அணிகள் ஜூன் 29ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடும். முதல் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதி போட்டியில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியும் இந்திய அணியும் மோத இருக்கின்றன. 


இந்தநிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி வெஸ்ட் இண்டீஸ் தீவுகளின் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியானது மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. AccuWeather இன் படி, வியாழன் (ஜூன் 27), கயானா அதிக மழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்புகள் உள்ளன. அதன்படி, மழைக்கான வாய்ப்பு 88% என்றும், இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு 18% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான அரையிறுதி மழையால் பாதிக்கப்பட்டால், ரிசர்வ் டே உள்ளது. ஆனால், இந்தியா - இங்கிலாந்து இடையிலான டி20 உலகக் கோப்பை  2024 அரையிறுதி போட்டிக்கு ரிசர்வ் டே எதுவும் அறிவிக்கப்படவில்லை. கூடுதலாக 250 நிமிடங்கள் (அதாவது 4 மணிநேரம்) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதற்குள் போட்டி முடியவில்லை என்றாலோ அல்லது ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் ஆட்டம் முற்றிலும் கைவிடப்பட்டாலோ இந்திய அணியே இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 


ஏன் இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்லும்..? 


குரூப் 1 ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி டி20 உலகக் கோப்பை 2024 போட்டிகளில் களமிறங்கிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. கனடாவுக்கு எதிரான குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் மட்டுமே மழை காரணமாக இந்திய அணி விளையாடவில்லை. தற்போது குரூப் 1ல் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.


அதேநேரத்தில் இங்கிலாந்து அணி ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் மழை காரணமாக குரூப் ஸ்டேஜில் விளையாடவில்லை. தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து, சூப்பர் 8 சுற்றில் முன்னேறிய இங்கிலாந்து அணி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தநிலையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடி வெற்றியை இந்திய அணி பதிவு செய்யாவிட்டாலும், சூப்பர்-8ல் இங்கிலாந்தை விட அதிக புள்ளிகள் பெற்றிருந்ததால், ரோஹித் சர்மா தலைமையிலான இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும். 


அதாவது ஐசிசி விதிகளின்படி, அரையிறுதி ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டால், சூப்பர்-8 புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.  


இறுதிப்போட்டி எப்போது..? 


2024 டி20 உலகக் கோப்பை இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்திய நேரப்படி, தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் அரையிறுதி ஆட்டம் ஜூன் 27-ம் தேதி காலை 6 மணிக்கும், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இரவு 8 மணிக்கும் நடைபெறும். இதில், வெற்றிபெறும் இரண்டு அணிகளும் 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜூன் 29ம் தேதி இரவு 8 மணிக்கு விளையாடி சாம்பியன் பட்டத்திற்காக போராடும்.