டி20 உலகக் கோப்பை 2024ல் இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை நேற்று எதிர்கொண்டது. இந்த போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி 2 புள்ளிகளை பெற்றது.


நேற்றைய போட்டியில் அயர்லாந்து அணிக்கு இந்திய அணிக்கு மிகப்பெரிய சோதனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாசாவ் கவுண்டி சர்வதேச ஸ்டேடியத்தின் பிட்ச் காரணமாக, முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 96 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இலக்கை துரத்திய இந்திய அணி சிக்கலின்றி 12.2 ஓவர்களில் 97 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.


இந்தநிலையில், இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய ரோஹித் சர்மா இந்திய அணி தேர்வில் தவறு செய்துவிட்டோம் என்று தெரிவித்தார். இது தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஏன் அப்படி சொன்னார் ரோஹித் சர்மா...? 


இந்தியா- அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்ற நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிறைய சாதகமாக இருந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் மட்டுமின்றி அயர்லாந்து பந்துவீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களுக்கு சற்று சிரமத்தை கொடுத்தனர். மேலும், அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டிலின் ஷார்ட் பிட்ச் பந்தில் புல் ஷாட் விளையாட முயன்ற போது, ​​ரோஹித் சர்மாவின் வலது கையில் பட்டது. இதனால் 52 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா ரிட்டயர் ஹெட் ஆகி வெளியே சென்றார். 


 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல உதவி கிடைத்த பிறகு, 4 சுழற்பந்து வீச்சாளர்களை இங்கு விளையாட வைக்க முடியுமா என்பது தெரியவில்லை என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ ஆம், கையில் கொஞ்சம் வலி இருக்கிறது. பிட்ச்சில் இருந்து என்ன எதிர்பார்ப்பது என்பது பற்றி நான் முற்றிலும் அறியாமல் இருக்கிறேன். 5 மாத பிட்ச்சில் எப்படி விளையாடுவது என்று தெரியவில்லை. இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் பேட்டிங் செய்தபோது பிட்ச் நிலையாக இல்லை என்று நினைக்கிறேன். ஆனால், இது பந்துவீச்சாளர்களுக்கு போதுமானதாக இருந்தது. இதையடுத்து, தொடர்ந்து நீங்கள் ஒரே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். 


அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங், ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்கள் எடுத்தது சிறப்பாக அமைந்தது. இங்கு நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட முடியாது என்று நினைக்கிறேன். நாங்கள் அணியை தேர்ந்தெடுக்கும்போது, சமநிலையுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், இப்போது வேகப்பந்து வீச்சாளர்களை அதிகமாக விரும்புகிறோம். 4 வேகப்பந்து வீச்சாளர்களை எடுத்து, கூடுதலாக இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை கொண்ட ஆல்-ரவுண்டர்களை எடுத்திருக்கலாம்.” என்று தெரிவித்தார். 


பாகிஸ்தானுக்கு எதிரான வியூகம் என்ன..? 


பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்து பேசிய ரோஹித் சர்மா, “ உண்மையை சொல்வதென்றால், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பிட்ச்சில் இருந்து என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்ப எங்களை நாங்கள் தயார் செய்துகொள்ள வேண்டும். இது எங்களது பிளேயிங் 11 வீரர்கள் அனைவருக்கும் பங்களிக்க வேண்டிய ஒரு விளையாட்டாக இருக்க வேண்டும். சற்று கடினமாக இருந்தாலும், ஸ்டேடியத்தில் சிறிது நேரம் செலவழித்து, அங்கு என்ன மாதிரியான ஷாட்களை ஆட வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 


ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர்  எக்ஸ்ட்ரா சீம்களை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக பந்துவீசினார்” என்று தெரிவித்தார். 


முன்னதாக, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது 4 சுழற்பந்து வீச்சாளர்கள் ஏன் தேவை என்ற ரகசியத்தை அமெரிக்காவில் சொல்லுகிறேன் என்று ரோஹித் சர்மா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.