ஐசிசி டி20 உலகக் கோப்பை:
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் படி குரூப் A வில் இந்திய அணியும், குரூப் B யில் ஆஸ்திரேலிய அணியும், குரூப் C யில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் குரூப் D யில் தென்னாப்பிரிக்க அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது.
அதேநேரம் பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்னும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இச்சூழலில் இந்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்:
பாகிஸ்தானுக்கான வாய்ப்பு எப்படி?
அமெரிக்க அணிக்கு எதிராக நேற்று (ஜூன் 12) நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணிக்கான சூப்பர் 8 வாய்ப்பு உருவாகி உள்ளது. முன்னதாக கனடா அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதன் மூலம் அந்த அணியின் நிகர ரன்ரேட் 0.191 ஆக உயர்ந்தது.
இச்சூழலில் அயர்லாந்தும் அமெரிக்க அணியும் மோதும் போட்டியில் அமெரிக்க அணி தோல்வி அடையும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. அதேநேரம் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி ஒரு வேளை மழையால் ரத்து செய்யப்பட்டால் பாகிஸ்தான் அணிக்கான சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கான வாய்ப்பு எப்படி?
இங்கிலாந்து அணி குரூப் B யில் விளையாடி வருகிறது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதியாகி இருக்கும் சூழலில் ஓமன், நமீபியா ஆகிய ஆணிகள் எலிமினேட் ஆகிவிட்டன. தற்போது ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் தான் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் சூப்பர் 8 சுற்றுக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற வேண்டும் என்றால் ஓமன் மற்றும் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும். அதேபோல் ஜூன் 15 ஆம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து அணி தோல்வியடைய வேண்டும். இது நடக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணி சூப்பர் 8க்கு தகுதி பெறலாம்.
இலங்கைக்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது?
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தது. இது அந்த அணிக்கு பெரும் அடியாக மாறியது. அதேபோல் ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இச்சூழலில் நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற வேண்டும். அதேபோல் வங்கதேச அணி மீதம் உள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோல்வி அடைய வேண்டும். இவ்வாறாக நட்ந்தால் இலங்கை அணி சூப்பர் 8 ல் விளையாடலாம்.
நியூசிலாந்துக்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது?
நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. இதனால் நியூசிலாந்து அணியின் ரன்ரேட் -2.425 என்று குறைந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனிடையே ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல் உகாண்டா அணிக்கு எதிரான போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் இரண்டு போட்டிகளிலும் மொத்தமாக 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு, 5.225 என்ற நிகர ரன் வீதத்தைப் பெற்றுள்ளது. இதனால் நியூசிலாந்து அணிக்கு சூப்பர் 8க்கான வாய்ப்பு சவாலாக உள்ளது.