ஜூன் 1 முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்கவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024 போட்டிக்கான தங்களது அதிகாரப்பூர்வ ஜெர்சியை தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் வெளியிட்டுள்ளன.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024க்கான நியூசிலாந்தின் ஜெர்சி, 90 காலக்கட்டத்தில் நியூசிலாந்து அணி அணியிருந்த ஜெர்சியின் தோற்றத்தை ஒத்திருக்கிறது. இன்று நியூசிலாந்து அணி தனது உலகக் கோப்பை அணியை வெளியிட்டவுடன், இந்த ஜெர்சியையும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது.
வரவிருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024 போட்டியில், நியூசிலாந்து, உகாண்டா, ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் பப்புவா நியூ கினியாவுடன் குரூப் சியில் இடம்பிடித்துள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான அணி, ஜூன் 7 ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தனது முதல் டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இருக்கிறது.
நியூசிலாந்து அணிக்கு முன்னதாக நேற்று தென்னாப்பிரிக்கா அணியும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024 போட்டிக்கான அதிகாரப்பூர்வ ஜெர்சியை வெளியிட்டது. இதில், அவர்களது நாட்டின் தேசிய மலரான கிங் புரோட்டியா, டி-சர்ட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024ல் தென்னாப்பிரிக்கா அணி, நெதர்லாந்து, வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கையுடன் டி குரூப்பில் இடம் பெற்றுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் ஆட்டத்தில் வருகின்ற ஜூன் 3ம் தேதி இலங்கை அணிக்கு எதிராக விளையாடுகிறது.
அறிவிக்கப்பட்ட நியூசிலாந்து அணி:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், டிரென்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், டிம் சவுதி
வரவிருக்கும் 2024 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் நாடுகள்:
- இந்தியா
- பாகிஸ்தான்
- அயர்லாந்து
- அமெரிக்கா
- கனடா
- இங்கிலாந்து
- ஆஸ்திரேலியா
- நமீபியா
- ஸ்காட்லாந்து
- ஓமன்
- நியூசிலாந்து
- வெஸ்ட் இண்டீஸ்
- ஆப்கானிஸ்தான்
- உகாண்டா
- பப்புவா நியூ கினியா
- தென்னாப்பிரிக்கா
- இலங்கை
- வங்கதேசம்
- நெதர்லாந்து
- நேபாளம்
வரவிருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான அணிகளுக்கான பெயர்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நெருங்கி வருவதால், பங்கேற்கும் நாடுகளின் கிரிக்கெட் வாரியத்தின் மீது அனைவரது பார்வையும் உள்ளது.
ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்களில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான அணியில் இடம்பிடிப்பவர்களின் பெயர்களை சமர்ப்பிக்க மே 1ம் தேதி வரை கிரிக்கெட் வாரியங்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கெடு விதித்துள்ளது.