ஐபிஎல் போட்டிகளில் எப்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ராசியில்லையோ, அதுபோல் ஐசிசி போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்கு ராசி இருக்காது. இரு அணிகளுக்கும் நாக் அவுட் சுற்றுகள் என்றால் அலறும். 


ஐசிசி நடத்தும் மிகப்பெரிய போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணியை சோக்கர்ஸ் என்ற அழைப்பர். அதன் காரணம், லீக் சுற்றுகளில் சிறப்பாக விளையாடும் தென்னாப்பிரிக்க அணி காலியிறுதி, அரையிறுதி போட்டிகளில் என்றால் தோற்றுவிடும். அப்படியான ராசி எப்போதும் தென்னாப்பிரிக்கா அணிக்கு உள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் எப்போதும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலமாக இருக்கும் தென்னாப்பிரிக்க அணி, முக்கியமான போட்டிகளில் தோற்று மூட்டை கட்டி வெளியேறும். 


நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணி, 2024 டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இடம் பிடித்துள்ளது. எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, நாளை காலை 6 மணிக்கு அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. 


வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் 2024 டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணி தோற்கடிக்கப்பட முடியாத அணியாக வலம் வருகிறது. இந்தநிலையில், நாளை நடைபெறும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு செல்லும் என்று நம்பப்படுகிறது. 


இப்படியான சூழ்நிலையில், தென்னாப்பிரிக்கா அணியும் நாக் அவுட் போட்டிகளின் வரலாறு பற்றியும் இங்கு தெரிந்து கொள்வோம். 


ஒருநாள், டி20 என ஆடவர் உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுகளில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? அதுவும் கடைசியாக 2015 உலகக் கோப்பை காலிறுதி போட்டியில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி சிட்னியில் இலங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அதன்பிறகு, நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தோற்று வெளியேறியது. 


ஆடவர் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா: 


விளையாடியது - 10
வெற்றி - 1
தோல்வி - 8
டை - 1 


எப்படி தோற்றது தென்னாப்பிரிக்கா அணி..? 


நாக் அவுட் சுற்றுகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் தென்னாப்பிரிக்கா அணி அதிகபட்சமாக 3 முறை தோற்று வெளியேறியுள்ளது. 


ஒருநாள் உலகக் கோப்பை: 



  • 1992 - சிட்னியில் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்றது.

  • 1996 - கராச்சியில் நடந்த காலிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்றது. 

  • 1999 - பர்மிங்காமில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டி டை ஆன நிலையில், புள்ளிகள் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா அணி வெளியேறியது.

  • 2007 - செயின்ட் லூசியாவில் நடந்த அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.

  • 2011 - மிர்பூரில் நடந்த காலிறுதியில் நியூசிலாந்திடம் தோற்றது.

  • 2015 - சிட்னியில் நடந்த காலிறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக வெற்றி பெற்றது.

  • 2015 - ஆக்லாந்தில் நடந்த அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்றது.

  • 2023 - கொல்கத்தாவில் நடந்த அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.


டி20 உலகக் கோப்பை: 



  • 2009 - நாட்டிங்ஹாமில் நடந்த அரையிறுதியில் பாகிஸ்தானிடம் தோற்றது.

  • 2014 - மிர்பூரில் நடந்த அரையிறுதியில் இந்தியாவிடம் தோற்றது. 


ஜூன் 27ம் தேதி (நாளை) நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால் முதல் முறையாக உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சாதனையை படைக்கும்.