டி20 உலகக் கோப்பை இதுவரை 8 முறை நடந்துள்ள நிலையில், டி20 உலகக் கோப்பை 2024யானது 9வது பதிப்பாகும். இந்த முறை இந்த போட்டி வருகின்ற ஜூன் 2ம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் 2024 நடந்து முடிந்த நிலையில், இதில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அடுத்ததாக டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளனர். இதற்காக இந்திய அணியின் முதல் பேட்ச் கடந்த மே 25ம் தேதியே அமெரிக்கா சென்றது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வருகின்ற ஜூன் 1ம் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தையும், ஜூன் 5ம் தேதி அயர்லாந்து அணியையும் எதிர்கொண்டு 2024 டி20 உலகக் கோப்பையை தொடங்குகிறது.
8 டி20 உலகக்கோப்பையிலும் களமிறங்கி அசத்தல்:
இந்தநிலையில், டி20 உலகக் கோப்பை இதுவரை 8 பதிப்புகள் நடந்துள்ள நிலையில், 2024 டி20 உலகக் கோப்பையை சேர்த்து இதுவரை நடந்த அனைத்து உலகக் கோப்பையிலும் களமிறங்கிய, களமிறங்கபோகும் இரண்டு சிறப்பு வீரர்களை பற்றி இங்கே பார்க்க போகிறோம். அந்த வீரர்கள் வேறு யாரும் அல்ல, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும், வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹாசனும்தான்.
இதுவரை நடந்த எட்டு டி20 உலகக் கோப்பையையும் விளையாடிய வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவும், ஷகிப் அல் ஹாசனும் உள்ளனர். டி20 உலகக் கோப்பையானது 2007ம் ஆண்டு முதல் முதலாக நடத்தப்பட்டது. அப்போதிருந்து, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னாள் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் இதுவரை நடந்த அனைத்து டி20 உலகக் கோப்பையிலும் விளையாடியுள்ளனர். மேலும், வருகின்ற ஜூன் மாதம் தொடங்கவுள்ள 2024 டி20 உலகக் கோப்பையிலும் அந்தெந்த அணிகளிலும் இடம் பிடித்துள்ளனர்.
வீரர்கள் | நாடு | விளையாடிய டி20 உலகக் கோப்பை |
ரோஹித் சர்மா | இந்தியா | 2007, 2009, 2010, 2012, 2014, 2016, 2021, 2022 |
ஷகிப் அல் ஹாசன் | வங்காளதேசம் | 2007, 2009, 2010, 2012, 2014, 2016, 2021, 2022 |
2007 டி20 உலகக் கோப்பையில் அறிமுகமான ரோஹித் - ஷகிப்:
2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் தனது முதல் ஆட்டத்தில் விளையாடியது. இதில் ரோஹித் சர்மா தனது முதல் டி20 அரைசதத்தை அடித்து 'பிளேயர் ஆஃப் தி மேட்ச்' விருதை வென்று, இந்தியாவை அரையிறுதிக்கு செல்ல உதவினார்.
மறுபுறம், ஜோகன்னஸ்பர்க்கில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஷகிப் சிறப்பாக விளையாடினார். அன்றைய போட்டியில் 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்காளதேச அணிக்கு மூன்றாவது டி20 சர்வதேச வெற்றியை பெற்று கொடுத்தார். அப்போது ஷகிப்புக்கு 20 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹித்-ஷகிப்பின் டி20 உலகக் கோப்பை விவரம்:
- டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா இதுவரை 36 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். இந்த 36 இன்னிங்ஸ்களில், இவர் 127.89 ஸ்ட்ரைக் ரேட்டில் 963 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 9 அரை சதங்களும் அடங்கும். டி20 உலகக் கோப்பையில் ரோஹித்தின் அதிகபட்ச ஸ்கோர் 79 நாட் அவுட்.
- ஷகிப் அல் ஹசன் டி20 உலகக் கோப்பையில் இதுவரை 35 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். இந்த 35 இன்னிங்ஸ்களில், இவர் 3 அரை சதங்கள் உட்பட 122.44 ஸ்ட்ரைக் ரேட்டில் 742 ரன்கள் எடுத்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் ஷகிப்பின் சிறந்த ஸ்கோர் 84 ரன்கள் ஆகும்.
- டி20 உலகக் கோப்பையிலும் ஷகிப் பந்துவீச்சிலும் கலக்கியுள்ளர். இதுவரை ஷகிப் 36 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 6.79 என்ற எகானமியில் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஷகிப்பின் சிறந்த பந்துவீச்சு 9 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதில் ஷகிப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளார்.