2023ம் ஆண்டு நடைபெறும் ஒருநாள்  உலகக் கோப்பையை தொடர்ந்து, அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற இருக்கிறது. 


மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த டி20 உலகக் கோப்பை போட்டி ஜூன் மாதத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் என தெரியவந்துள்ளது. 


முன்னதாக, கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் ஆனது. கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்த இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வியுற்று அரையிறுதியில் வெளியேறியது. 


ESPN Cricinfo' அறிக்கையின்படி, 2024 டி20 உலகக் கோப்பை ஜூன் 4 முதல் 30 வரை விளையாடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நடத்துவதால் இரு அணிகளும் நேரடியாக தகுதிபெறும். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20  உலகக் கோப்பை போட்டியில் இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என இரண்டு இடங்களிலும் 10 மைதானங்களில் இந்த போட்டியானது நடைபெறவுள்ளது. இதற்காக, கடந்த வாரம் ஐசிசி அமெரிக்காவில் சில ஸ்டேடியங்களை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. 


அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் பப்புவா நியூ கினியா ஆகியவை இந்த வாரம் 20 அணிகள் கொண்ட உலகக் கோப்பைக்கு ஐசிசியின் பிராந்திய தகுதிச் சுற்றுகள் மூலம் தகுதி பெற்றுள்ளன. இது தவிர ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் இதுவரை தகுதி பெற்றுள்ளன. 


பிராந்திய தகுதிச் சுற்றுக்கு முன்பே 12 அணிகள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றிருந்தன. இதில் போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவும் அடங்கும். இது தவிர, 2022 டி20 உலகக் கோப்பையின் டாப்-8 அணிகள்- ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை. அதேசமயம் டி20 சர்வதேச தரவரிசையின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் தகுதி பெற்றுள்ளன. 


இந்தமுறை வித்தியாசமாக நடைபெறும் டி20 உலகக் கோப்பை: 


இந்த முறை டி20 உலகக் கோப்பை போட்டியானது கடந்த இரண்டு பதிப்புகளை விட வித்தியாசமான வடிவத்தில் நடைபெறும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த இரண்டு பதிப்புகளில் சூப்பர் 12 மூலம் நடைபெறும். ஆனால், 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் முதல் கட்டமாக 20 அணிகள் தலா 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, இதில் முதல்-2 அணிகள் சூப்பர்-8க்கு தகுதி பெறும். சூப்பர்-8 அணிகள் 4-4 என்ற இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும், இதில் இரு குழுக்களின் முதல்-2 அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.