டி20 உலகக் கோப்பை 2024 தொடங்க இன்னும் வெகுதூரம் இல்லை. வருகின்ற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் தொடங்க இருக்கிறது. தற்போது, இந்த உலகக் கோப்பையை மனதில் கொண்டு இந்திய அணி பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வருகின்ற மார்ச் மாதம் முதல் மே மாதம் இறுதி வரை ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்படலாம்.
இந்திய அணி தேர்வில் சரியான முடிவுகளை பிசிசிஐ தேர்வுக்குழு எடுத்தால், இந்தாண்டு டி20 உலகக் கோப்பை நமது கைகளில் வந்து சேரும். 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுவதற்கு கடினமான உழைப்பு அவசியம். புள்ளிவிவரங்களை பார்க்கும்போதும் இந்திய அணி இந்த முறை டி20 உலகக் கோப்பையை வெல்லுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றே தெரிகிறது.
ஏனென்றால், இந்திய அணி சர்வதேச டி20 தரவரிசையில் நீண்ட காலமான நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்திய அணி டி20 வடிவத்தில் மிகப்பெரிய எழுச்சியை கண்டுள்ளது.
பலவீனத்தை சரி செய்த இந்திய அணி:
2022 ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி 28 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 18 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில், இந்திய அணி 7 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. இந்திய அணியின் வெற்றி விகிதம் 70 சதவிகிதத்திற்கு மேல் இருப்பதால் இந்த டி20 உலகக்கோப்பை இந்தியாவுக்கே என ரசிகர்கள் நம்புகிறார்கள். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், 2022 உலகக் கோப்பையில் மெதுவான ரன் ரேட் காரணமாக விமர்சனங்களை எதிர்கொண்ட டீம் இந்தியா. இந்தப் போட்டியிலிருந்து ஓவருக்கு சராசரியாக 9.33 ரன்கள் எடுத்துள்ளது. அதாவது இந்திய அணி அதன் முக்கிய பலவீனங்களில் ஒன்றை முறியடித்துள்ளது.
வீரர்களின் தனிப்பட்ட ஆட்டம்:
20 சர்வதேச போட்டியிலும் இந்திய வீரர்களின் தனிப்பட்ட ஆட்டம் சிறப்பாக உள்ளது. பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் டி20 தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர். அதேபோல், பந்துவீச்சு தரவரிசையிலும் இந்தியாவின் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் முதல் 6 இடங்களுக்குள் உள்ளனர். ஆல்ரவுண்டர் தரவரிசையிலும் இந்திய வீரர் அக்சர் படேல் முதல் 5 இடங்களுக்குள் வந்துள்ளார்.
ஏராளமான திறமைகள், தேர்வு-வியூகம்:
இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியைத் தவிர மற்ற அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா ஒருதலைப்பட்சமாக வெற்றிபெற்று அசத்தியது. டி20 போட்டிகளிலும் இந்திய அணியின் செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளது. தேர்வு முதல் வியூகம் வரை அனைத்து துறைகளிலும் இந்திய அணி மிகச் சிறந்த அணியாக திகழ்கிறது. இந்திய அணிகளின் திறமையும் ஏராளம். இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்தால் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.