நியூசிலாந்து அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கான்வே. அந்த அணியின் தொடக்க வீரராக தற்போது ஆடி வருகிறார். நியூசிலாந்து அணி தற்போது பாகிஸ்தான் அணியுடன் டி20 தொடரில் ஆடி வருகிறது. நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரின் 4வது போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வருகிறது.


கான்வேவிற்கு கொரோனா:


இந்த போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து வீரர் கான்வேக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கான்வேவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கிறிஸ்ட்சர்ச்சில் அவர் தங்கியிருந்த ஹோட்டலிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், அவர் 4வது டி20 போட்டியில் இருந்து விலகியுள்ளார். தொடர்ந்து அவரது உடல்நிலையை நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகமும், மருத்துவ குழுவினரும் கண்காணித்து வருகின்றனர்.


நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு பதிலாக அணியில் சாத் போவ்சை அணியில் சேர்த்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தற்போதை டி20 தொடரில் கான்வேவின் பேட்டிங் சிறப்பானதாக அமையவில்லை. அவர் முதல் போட்டியில் டக் அவுட்டும், 2வது போட்டியில் 20 ரன்னும், மூன்றாவது போட்டியில் 7 ரன்னும் மட்டுமே எடுத்தார்.






மற்ற வீரர்களுக்கு பாதிப்பா?


கொரோனா தொற்றால் நியூசிலாந்து வீரர் கான்வே பாதிக்கப்பட்டிருப்பது அந்த நாட்டு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்த மற்ற வீரர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


32 வயதான டேவன் கான்வே நியூசிலாந்து அணியின் மூன்று வடிவிலான போட்டிகளிலும் தொடக்க வீரராக உள்ளார். 2020ம் ஆண்டு முதல் நியூசிலாந்து அணிக்காக ஆடி வரும் கான்வே 18 டெஸ்ட் போட்டியில் ஆடி 4 சதங்கள், 1 இரட்டை சதம், 8 அரைசதங்கள் உள்பட 1450 ரன்களும், 32 ஒருநாள் போட்டியில் ஆடி 5 சதம், 3 இரட்டை சதம் விளாசி 1246 ரன்களும், 44 டி20 போட்டிகளில் ஆடி 9 அரைசதங்களுடன் 1275 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 200 ரன்களும், ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 152 ரன்களும், டி20 போட்டியில் அதிகபட்சமாக 99 ரன்களும் எடுத்துள்ளார்.


தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது. 4வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில், நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசி வருகிறது.