ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 2024 டி 20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டி மோதலில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதன்மூலம், டி20 உலகக் கோப்பையில், 10 வருட காத்திருப்புக்குப் பிறகு இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.


ஐசிசி நடத்தும் பெரிய போட்டிகளை பார்த்தால், இந்தியா தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு வந்தாலும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை மட்டும் தவறவிடுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 5 முறை ஐசிசி நடத்தும் போட்டியில் இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தாலும், தொடர்ந்து தோல்விகளை சந்தித்துள்ளது. 


கடைசியாக ஐசிசி கோப்பையை இந்திய அணி எப்போது வென்றது?


ஐசிசி நடத்திய போட்டியில் இந்திய அணி கடைசியாக 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையையும் இந்திய அணி கைப்பற்றியது. இந்த இரட்டை வெற்றிக்கு பிறகு, இப்போது 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. 


டி20 உலகக் கோப்பையில் 4 முறை தோல்வி:


கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 4 முறை டி20 உலகக் கோப்பையில் விளையாடியுள்ளது. 2014 இறுதிப் போட்டியில் இலங்கையிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இந்திய அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. அதன் பிறகு, 2016, 2021 மற்றும் 2022 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. கடந்த 2016 மற்றும் 2022 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறியது. 


ஒருநாள் உலகக் கோப்பையில் 3 முறை தோல்வி:


2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பிறகு, 2015 ஒருநாள் உலகக் கோப்பைக்கான சவாலை இந்தியா எதிர்கொண்டது. இந்திய அணி குரூப் ஸ்டேஜில் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறியது. அதன் பிறகு, 2019 உலகக் கோப்பையிலும், இந்தியா அரையிறுதி நியூசிலாந்து அணியிடம் தோற்று வெளியேறியது. 2023 உலகக் கோப்பையில் இந்தியா தனது அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இரண்டு முறை தோல்வி:


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இதுவரை 2 இறுதிப் போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி விளையாடியது. ஆனால் சாம்பியனாக முடியவில்லை. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோற்றது. அதன்பிறகு, 2023 ம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்று இந்திய அணி ஏமாற்றம் அளித்தது. 


2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதி


இதற்கிடையில், 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் தோல்வியை யாராலும் மறக்கமுடியாது. குரூப் ஸ்டேஜ்களில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.


கடந்த 10 ஆண்டுகளில் ஐசிசி போட்டிகளில் இந்திய அணியின் செயல்திறன்: 



  • 2014- டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோல்வி

  • 2015- ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி

  • 2016- டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வி

  • 2017- சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி

  • 2019- ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோல்வி

  • 2021- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி

  • 2021- டி20 உலகக் கோப்பையில் குரூப் சுற்றுடன் வெளியேற்றம்

  • 2022- டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வி

  • 2023- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி

  • 2023- ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி