IND vs PAK T20 World Cup 2024: 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு மோசமான தொடக்கமாகவே அமைந்தது. அமெரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இந்தநிலையில், இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கிறது. அமெரிக்க அணியிடம் தோற்ற பாகிஸ்தான் அணி, இன்று இந்திய அணிக்கு எதிராக தோல்வியடைந்தால் சூப்பர் 8 சுற்றுக்கு செல்வது கடினமாகிவிடும்.  இரண்டாவதாக, அடுத்த போட்டியில் அமெரிக்க அணி வெற்றி பெற்றாலும், பாகிஸ்தான் அணிக்கு சிக்கலாகிவிடும். 






சூப்பர் 8 சுற்றுக்கு செல்லுமா பாகிஸ்தான்..? 


குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகள் உள்ளன. இன்று நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியைடைந்தால் 2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது. குரூப் ஏ பிரிவின் புள்ளிகள் பட்டியலில் அமெரிக்கா தற்போது 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த அணியின் ரன் ரேட்டும் சிறப்பாக உள்ளது. அமெரிக்கா அடுத்ததாக இந்தியாவிற்கு எதிராகவும், அயர்லாந்துக்கு எதிராகவும் ஒரு போட்டியில் விளையாட உள்ளது. இந்த இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றிபெற்றால் கூட பாகிஸ்தானுக்கு சூப்பர் 8 பாதை கடினமாகிவிடும். எனவே, அடுத்து அமெரிக்கா விளையாடும் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைய வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டும். 


குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் தற்போது 4வது இடத்தில் உள்ளது. 1 போட்டியில் விளையாடி தோல்வியை சந்தித்துள்ளது. பாகிஸ்தானின் அடுத்த போட்டி இன்று நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரானது. இதன் பிறகு கனடா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக களம் இறங்குகிறது பாகிஸ்தான். கடந்த போட்டியில் அயர்லாந்து அணியை கனடா தோற்கடித்தது. எனவே, கனடா அணியை எதிர்த்து பாகிஸ்தான் வெற்றி பெறுவது சுலபம் அல்ல.






மற்ற பிரிவுகளில் யார் யார் முதலிடம்..? 


குரூப் பி இன் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா தற்போது முதலிடத்தில் உள்ளது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. சி பிரிவில் புள்ளிப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது. அந்த அணியும் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்க அணி முதலிடத்தில் உள்ளது. இந்த அணியும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. முதலிடத்தில் உள்ள அனைத்து அணிகளுக்கும் தலா நான்கு புள்ளிகளுடன் உள்ளன.