2024 டி20 உலகக் கோப்பையில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இப்படி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி எப்போதும் பரபரப்பாக இருக்கும் நிலையில், இரு அணிகளும் எப்போது சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக மோதியது என்பது தெரியுமா..? இரு அணிகளும் எப்படி கிரிக்கெட் விளையாட்டை கையில் எடுத்தது தெரியுமா..? இப்படி அனைத்து விவரங்களையும் இங்கே பார்ப்போம்.
ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பை என இரண்டிலும், இந்தியாவும் பாகிஸ்தானும் 16 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இந்திய அணி அதிகபட்சமாக 15 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி ஒரே ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது. உலகக் கோப்பையில் இரு அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்படி தீயாய் விளையாடும் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து மட்டும் இல்லையென்றால் இந்தியா - பாகிஸ்தான் என்ற கிரிக்கெட் போட்டியே இருந்திருக்காது என்பது உங்களுக்கு தெரியுமா..?
இங்கிலாந்துதான் முக்கிய காரணம்:
இங்கிலாந்தில் இருந்து வந்த ஆங்கிலேயர்கள் கடந்த 1608-ம் ஆண்டு குஜராத் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து அடுத்தடுத்து இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர்.
கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி அன்று இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் துணைக் கண்டத்தில் உள்ள பிரிட்டிஷ் பேரரசு முடிவுக்கு வந்தது. ஆனால் அதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது ஆகஸ்ட் 14 அன்று, பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. இதனுடன் பிரிட்டிஷ் பேரரசு முடிவுக்கு வந்தது. ஆனால் இந்தியா முன்பு ஒரே நாடாக இருந்த இடத்தில், இப்போது பாகிஸ்தான் அதிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. அப்போதிலிருந்து இந்தியா - பாகிஸ்தானிடையே அவ்வபோது ஏற்பட்ட வாய்க்கால் போருடன், கிரிக்கெட்டிலும் போர் வெடிக்க தொடங்கியது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போது தொடங்கியது?
1952-ம் ஆண்டு கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முதல் முறையாக கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மோதல் தொடங்கியது. இரு அணிகளும் மோதிய அந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் இந்தியா சார்பில் விஜய் ஹசாரே, ஹேமு அதிகாரி, குலாம் அகமது ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.
உலகக் கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான்:
இந்தியாவும் பாகிஸ்தானும் 1992ம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் முதல்முறையாக நேருக்கு நேர் மோதின. 1992ம் ஆண்டு முதல் 2024 வரை இந்தியாவும், பாகிஸ்தானும் 50 ஓவர் (ஒருநாள்) வடிவத்தில் 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் இந்திய அணி அனைத்து போட்டிகளில் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதேநேரத்தில், நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியையும் சேர்த்து இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, அதில் ஒருமுறை மட்டுமே பாகிஸ்தான் அணி வெற்றியைப் பதிவு செய்ய முடிந்தது. இந்த வெற்றியும் பாகிஸ்தான் அணி கடந்த 2021ம் ஆண்டு பெற்றது. இந்திய அணி மற்ற 7 முறையும் வென்று அசத்தியுள்ளது.