டி20 உலகக் கோப்பை 2024 அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதன்மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி 3வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடுகிறது.
2024 டி20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வருகின்ற ஜூன் 29ம் தேதி இரவு 8 மணிக்கு பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் எதிர்கொள்கிறது. இரு அணிகளும் இதுவரையில் சிறப்பாக செயல்பட்டு ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. இருப்பினும், இறுதிப்போட்டியில் எந்த அணி தோல்வியை சந்தித்து, எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதை பார்ப்பதில் ஆர்வமாக உள்ளது.
முந்தைய கால கணக்கின்படி, இந்திய அணிக்குதான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏனெனில் அதற்கு சில காரணங்களும் உண்டு அது என்னவென்று இங்கே பார்க்கலாம்..
ஐசிசி கிரிக்கெட் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா எத்தனை முறை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது?
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா மொத்தம் 4 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியை எட்டியது. இங்கிலாந்தின் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று உலக சாம்பியன் ஆனது. இந்திய அணி உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை வென்ற நாள் (25 ஜுன் 1983). இது ஒரு சனிக்கிழமை.
2003 உலகக் கோப்பையில் இந்தியா இரண்டாவது முறையாக இறுதிப் போட்டியை எட்டியது. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. துரதிர்ஷ்டவசமாக, இந்த போட்டியில் இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டி நடைபெற்ற நாள் (23 மார்ச் 2003). இது ஒரு ஞாயிற்றுக்கிழமை.
இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் நடத்திய 2011 உலகக் கோப்பையில் இந்தியா மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியை எட்டியது. இந்தியாவின் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணி 2வது முறையாக கோப்பையை வென்ற நாள் (2 ஏப்ரல் 2011). இது ஒரு சனிக்கிழமை.
2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியானது இந்தியாவில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி 4வது முறையாக முன்னேறியது. இதில், ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக கோப்பையை வென்றது. இந்த போட்டி நடைபெற்ற நாள் (19 நவம்பர் 2023). இது ஒரு ஞாயிற்றுக்கிழமை.
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி:
டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தொடர்ந்து 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன், எந்த ஒரு டி20 உலகக் கோப்பையிலும் இந்திய அணி இவ்வளவு போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை. இந்திய அணி இதற்கு முன் 2007 மற்றும் 2014 டி20 உலகக் கோப்பைகளில் இறுதிப் போட்டிக்குள் முன்னேறியது. அதில், 2007 டி20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் மட்டுமே, பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. இந்த போட்டி நடைபெற்ற நாள் (24 செப்டம்பர் 2007). இது ஒரு திங்கள்கிழமை.
வங்கதேசத்தில் நடைபெற்ற 2014 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி, இலங்கை அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த போட்டி நடைபெற்ற நாள் (6 ஏப்ரல் 2014). இது ஒரு ஞாயிற்றுக்கிழமை.
இந்திய அணிக்கு ராசியில்லாத ஞாயிற்றுக்கிழமை:
எனவே, ஒருநாள், டி20 என இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை விளையாடிய உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் எல்லாம் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. மற்றபடி, மற்ற நாட்களில் இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் விளையாடிய நாட்களில் வெற்றியை பெற்று கோப்பையை ஏந்தியது.
இந்த சூழ்நிலையில், இந்திய நேரப்படி நாளை (சனிக்கிழமை) இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணியை டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது. முந்தைய கால கணக்கின்படி, இந்திய அணிக்குதான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.