2024 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதையடுத்து, இன்று ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. முன்னதாக, சுமார் 7 மாதங்களுக்கு முன்பு, இந்திய அணி 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்று ஏமாற்றம் அளித்தது. ஐசிசி இறுதிப் போட்டியில் இந்திய அணியின் சாதனை மிக மோசமாக உள்ளது. அது என்னவென்று இங்கே பார்க்கலாம். 


ஐசிசி போட்டிகளில் இறுதிப் போட்டியில் இந்திய அணி இதுவரை 12 முறை விளையாடியுள்ளது. தற்போது, 13வது முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. எனவே, இத்தகைய சூழ்நிலையில் கடந்த 12 ஐசிசி இறுதிப் போட்டிகளில் இந்திய அணியின் செயல்திறன் என்ன என்பதை இங்கே பார்க்கலாம். 


ஐசிசி இறுதிப் போட்டியில் இந்தியாவின் செயல்திறன்: 


இதுவரை நடந்த ஐசிசி 12 இறுதிப் போட்டிகளில் இந்திய அணி 4ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி கடைசியாக 11 ஆண்டுகளுக்கு முன்பு 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி மூலம் ஐசிசி பைனலை வென்றது. அதன்பிறகு, இந்திய அணி ஐந்து ஐ இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 


12 இறுதிப் போட்டி இந்திய அணிக்கு எப்படி அமைந்தது..? 



  • 1983- ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக கோப்பையை வென்றது.

  • 2000- சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.

  • 2002- சாம்பியன்ஸ் டிராபி டை ஆன நிலையில், இந்தியா - இலங்கை அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டது.

  • 2003- ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடன் இந்திய அணி தோல்வியடைந்தது.

  • 2007- டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

  • 2011- ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

  • 2013- சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது.

  • 2014- டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது.

  • 2017- சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

  • 2021- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது.

  • 2023- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது.

  • 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. 


இந்தநிலையில், 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தை வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் முன்னேறியது.


வெற்றிபெறும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு..? 


2024 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் நேருக்கு நேர் மோதுகின்றன. இவர்களில் யார் வெற்றி பெற்றாலும், அந்த அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.20.4 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும்.  மறுபுறம், இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு இதில் பாதி அதாவது ரூ.10.6 கோடி கிடைக்கும். இதுபோக, அரையிறுதி வரை முன்னேறிய இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு 6.5 கோடி ரூபாய் வழங்கப்படும்.